Saturday, April 9, 2011

"காமிடி பண்றாங்கோ"

இந்த தமிழ்நாடு எலக்சன் நமக்கு ரொம்ப புதுசா இருக்கு. போஸ்டர் இல்ல, மைக் போட்டு காத்து கூச்சல் போடல்ல, தோரணம் கட்டி தெருவை நாரடிக்கல்ல, நம்ம வீட்டு செவுத்துல அவங்க அப்பன் வீடு மாதிரி எழுதல, இப்படி பல புதுசு. தலைவருங்க பேச்சுக் கூட புதுசா தான் இருக்கு. சாம்பிளுக்கு சிலது.

கருணாநிதி: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் உற்பத்தி பெருக்குவோம். தடையில்லா மின்சாரம் வழங்குவோம்" 
(இந்த ஐந்து வருடமும் உங்க ஆட்சி இல்லைன்னு நினைச்சிக்கிட்டிருந்தீங்களா? இல்ல இதுவரைக்கும் கொள்ளை மட்டும் அடிச்சீங்களா?)

ஸ்டாலின்: "தலைவர் கலைஞரின் திட்டங்கள் மக்களை சென்று அடைந்திருக்கின்றன" (ஆமா. நீங்கதான் வீரப்ப சொல்றீங்க. தேர்தல் ஆணையம் எங்கே அடைய விடுது? அதான் பாதி வழியிலியே பிடிச்சிடுராங்களாமே?)

அழகிரி: " தேர்தலுக்கு பிறகு அ. தி. மு. க. இருக்காது" (தேர்தல் வரையாவது நீங்க இருப்பீங்களா? அந்த கலெக்டர் என்ன இந்த பாடு படுத்துறாரே?) 

மன்மோகன் சிங்: "ஊழலை ஒழித்தே தீருவது என்று இந்த அரசு செயல்படுகிறது"  (ஐயோ பாவம். ராசா ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன் வெலத்து ஊழல், குட்ரோச்சி தப்பிச்ச ஊழல், குதிரை வியாபாரி வெளிநாட்டில் பணம் பதுக்கியது, இதெல்லாம் சரி கட்டியாச்சா? இவ்வளவு வீறாப்ப சவுண்டு விடுறாரு. இல்ல மக்கள் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறாரா? நாற்பது திருடங்களுக்கு தலைவரா இருந்துக்கிட்டு பேச்ச பாரு பேச்ச)

ஜெயலலிதா: "அரசு ஊழியர்களின் குறைகளை களைவோம். அவர்கள் நலன் பாதுகாக்கப்படும்" (ஏம்மா! ராவோட ராவா அவங்களை கைது பண்ணி புழல் சிறையில வெச்சி வாராவாரம் பிரியாணி போடபோறீங்களா?)

சோனியா காந்தி: "தமிழக அரசின் செயல் பாடுகள் சரியாக உள்ளன. அவை மக்களை சென்று அடைந்திருக்கின்றன" (உங்க வீட்டு வாசல்ல கருணாநிதி ஆறு மணிநேரம் வெயிட் பண்ணது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சின்றது உங்களுக்கும் தெரிஞ்சிபோச்சா?)

சுஷ்மா சுவராஜ்: "தமிழக மீனவர்களுக்கு பி.ஜே.பி. கேடயமாக இருக்கும்" (அவங்க மீன் பிடிக்க போறதுக்கு முன்னாடி நீங்க போவீங்களா?

ராகுல் காந்தி: "இந்த அரசின் செயல் பாடுகளை பார்த்து ஓட்டு போடுங்கள்" (நேரடியா கருணாநிதிக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லிட்டு போங்களேன். அவரு மேல அப்படி என்ன கோவம்?)

வைகோ: "தேர்தலை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க போகிறோம்" (ஏன் சார்! நீங்க ஜெயாவோட மீட்டிங் வருவதே வேடிக்கை பார்க்கிறா மாதிரி தான் இருக்கும். இது என்ன புதுசா)

சு. சுவாமி: "எங்களுக்கு ஐந்து எம்.எல். ஏ. கிடைத்தால் போதும். யாரையும் ஊழல் செய்ய விடமாட்டோம்" (நீங்களே ஊழல் செய்துக்குவீங்களா?)

ராமதாஸ்: "வன்னியர்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் கலைஞர்தான்" (அதனால்தான் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க கலைஞர் மருத்துட்டரோ?)

திருமாவளவன்: "தமிழினம் தலை நிமிர கலைஞரை ஆதரிப்பீர்"  (ராஜபக்சேவை சந்தித்து கை குலுக்கி ஆதரிச்ச மாதிரியா?)

இவ்வளவு நேரம் உங்களை சிரிக்க வெச்சதுக்கு எனக்கு நன்றியாவது சொல்லுங்களேன். தமிழன் நன்றி கேட்டவன்ற பேரு வேணாம். 

Sunday, April 3, 2011

மகாபலி மன்னன் என்ன பாவம் செய்தானோ?

வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் தன்னை மகாபலி மன்னனோடு ஒப்பிட்டுக்கொண்டு, தாம்  அவரைப்போல் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அதை பொறுக்காத கும்பல் பூணூல் உருவிக்கொண்டு அவர் ஆட்சியை கலைக்க வருவதாகவும் பொருமியுள்ளார். அவர் தேர்தல் (௦02/04/2011)பொதுக்கூட்டத்தில் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அது அவர் உரிமை. கேட்கவந்த மக்கள் தலையெழுத்து. இடையில் நாம் யார்? ஆனால் அதற்காக நம் புராணத்தை தவறாக திரித்து கூறும்போது அதை கண்டித்து ஒரு விளக்கம் கூட தெரிவிக்கா விட்டால் நாம் இருந்து என்ன பயன்?

முதலில் ஒரு விளக்கம். பகவான் குள்ள உருவம் கொண்டு வாமனாக வந்து மகாபலி மன்னனிடத்தில் மூன்றடி மண் கேட்டான்? அவனுடைய குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் தர வேண்டாம் என்று தடுக்கிறார். மகாபலி மன்னன் சிறிதும் கேளாமல், தன் கையாலேயே நீரை விட்டு தானமாக தருகிறான். நீர் கிண்டியிலிருந்து நீர் விழாமலிருக்க வண்டு உருவம் கொண்டு சுக்கிரர் அடிக்கிறார். இதை அறிந்த பெருமான் சிறு தருப்பை புள் கொண்டு அந்த கிண்டியின் ஓட்டையை குத்தும் பொழுது சுக்கிரரின் பார்வை பரி போகிறது. பிறகு திரிவிக்ரமனாக உரு கொண்டு பூமியையும் ஆகாயத்தையும் ஈரடியில் அளந்து, மூன்றாவது அடி எங்கே என்று கேட்க மகாபலியும் தனது தலையை காட்ட அவனை பாதாள உலகத்திற்கு அனுப்பிவைத்தான். இது பதினெட்டு புராணங்களில் வாமன மற்றும் பாகவத புராணங்களில் வருகின்றது. 

மகாபலி மன்னன், பரம பக்தனான பிரஹலாதனின் பேரன். மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். அவன் நல்லாட்சியே நடத்தி வந்தானாயினும், அவனை சார்ந்தோர் தேவர்களுக்கு மிகவும் இன்னலை தந்தார்கள். வேதமுறைப்படி நடைபெற வேண்டிய நேம நிஷ்டைகள் அங்கே தடை பட்டன. இந்த காலகட்டத்தில் தான் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு அதிதி என்ற தாயின் வயிற்றில் வாமனனாக பிறக்கின்றார். அதிதியின் மகன் என்பதால் அவர் ஆதித்யன் என்றும், இந்திரனுக்கிளையவன் என்கிறபடியால் உபேந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். பகவான் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பி அங்கே அவனுக்கு மிகச்சிறந்த அரச உரிமையை அளித்தார். மாறாக அவனை கொல்லவில்லை. உன்னுடைய வம்சாவழியினருக்கு என்னால் எந்த ஒரு தீங்கும் நேராது என்று பிரகலாதனுக்கு அளித்த வரத்தின் படியே அவனுக்கு அருள் பாலித்தார். இதுதான் புராணம் தரும் செய்தி.

இப்போது நம்ம கதைக்கு வருவோம். மேற்கூறிய புராண கதைக்கும் கருணாநிதிக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? வட தென் துருவங்களுக்கிடையேயான வித்தியாசம்தான் இருக்கிறது. 

1. கருணாநிதியோ நாத்திகன். புராணங்களை ஏற்காதவர். பழிப்பவர். கிண்டல் செய்பவர். அவை கற்பனை என்று முழங்குபவர். அந்த வரிசையில் மகாபலியும் இவர் கணக்கில் கற்பனைதான். இல்லாத விஷயம்தான். அதனோடு தன்னை ஒப்புமை படுத்துகிறார் என்றால் அவரின் அறிவை பற்றி என்னெவென்று புகழ்வது. 

மகாபலியோ ஆத்திகன். பிரகலாதனின் பேரன். பகவான் விஷ்ணுவின் பரமபக்தன்.       

2. கருணாநிதி செய்வது ஆட்சி என்ற பெயரில் நடக்கும் அலங்கோலம். தமிழர்களை தன்மானம் இழக்க செய்து பிச்சைக்கார கும்பலாக அண்டை அயலாரிடம் வேடிக்கை பொருளாக்கிவிட்ட அதிசயம். அனால் மகாபலி செய்தது மிகச்சிறந்த ஆட்சி. அவன் பாதாள லோகம் சென்றும் மக்கள் அவனை காண அவள் கொள்ளும் அளவுக்கு மிகச்சிறந்த ஆட்சி. 

3. கருணாநிதி தன் குடும்பத்திற்காக உழைப்பவர். மகாபலி பிறருக்காக உழைப்பவர். 

4. தன்னை ஒழிக்க பூணூலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் வருவதாக கற்பனையாக ஒரு புரளியை கிளப்பிவிட்டவர் கருணாநிதி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். இவர் எதிர்ப்பதாக கூறும் ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ, கம்யூனிஸ்டுகளோ, முஸ்லிம் அமைப்புகளோ, புதிய தமிழகமோ, சரத் குமார் போன்றோரோ பூணூல் அணிந்திருக்கவில்லை. இவரின் தேர்தல் தில்லுமுல்லுக்கு துணை போகாத, கிடுக்கிப்பிடி போட்டிருக்கும் தலைமை தேர்தல் அதிகாறு திரு. குரைஷியோ, மாநில அதிகாரி திரு. பிரவீன் குமாரோ கூட பூணூல் போட்டிருக்கவில்லை. பிறகு இவர் யாரைத்தான் கூறுகிறார். அவருக்கே வெளிச்சம். 

அனால் மகாபலியை அகற்ற பூணூல் உருவிக்கொண்டு யாரும் வரவில்லை. வாமனனும் யாசகம் பெற வந்தானேயன்றி படை எடுத்து வரவில்லை. சொல்லப்போனால் சுக்கிராசார்யார் என்ற பூணூல் காரரின் பேச்சை கேட்காததின் விளைவைத்தான் மகாபலி அனுபவித்தான். இங்கே அந்த பூணூல் தான் காக்க முன்வந்தது.  

இந்த விஷயத்தில் ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்ளது. மகாபலி கேரளாவை ஆண்டதாக அம்மாநில மக்கள் நம்புகிறார்கள். அது அவனுடைய சொத்து என்பது அவர்களின் நம்பிக்கை. இத்தகைய ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்கும் வந்து தொலைக்கவேண்டும். தமிழகம் முழுமையும் கருணாநிதியின் குடும்ப சொத்தாக வேண்டும் என்று இவர் கனவு காண்கிறார் போலிருக்கிறது. 

இப்படி சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களை, தமக்கும் எல்லாம் தெரிந்த மாதிரி கற்பனை செய்து கூறுவது ஒரும் அதிசயமில்லை. வயசாகிவிட்டால் உளறத்தானே செய்வார்கள். 
  

மெனெக்கெட்டு என்ன கிரிக்கெட்டு?

இப்பெல்லாம் கிரிக்கெட்டு பார்க்கணும், பேசணும், படிக்கணும். இல்லைன்னா உங்களை வேற்று கிரக மனிதர்களாவே பார்ப்பார்கள். காரணம், நாம் சொந்தமாக சிந்திப்பதில்லை. அடுத்தவர்களை காப்பி அடித்தே பழகி விட்டோம். போதா குறைக்கு காலம் காலமா அடிமையாவே இருந்துட்டோமில்லையா? அதனாலதான் சுதந்திரம் வந்தும் அந்நிய மோகமும் அடிமைத்தளையும் போகவேமாட்டேங்கிறது. 

கிரிக்கெட்டு சும்மா விளையாட்டா மட்டுமிருந்தா நாம ரசிக்கலாம். அனால் இதை வைத்து இங்கே ஒரு கொள்ளை வியாபாரமில்ல நடக்குது. ஆட்டக்காரன் உடம்பெல்லாம் விளம்பரம். அங்கே விற்பனை ஆகாதா பொருள் என்று இருந்தால் அது வேடிக்கை பார்க்க வரும் நம்மைப்போன்ற அப்புராணிங்க மட்டும்தான். பேட்டிங், பிக்சிங், ஏலம் அப்படி இப்படின்னு அரசியல்வாதிகள், கார்பரேட் பெருச்சாளிகளின் ஆடுகலாமா அந்த விளையாட்டு ஆனபின்பு நமக்கென்ன அங்கே வேலை. நாம அங்கே இருக்கிறவறையிலும்தான் இவங்களுக்கு மரியாதை. அவங்க வியாபாரத்தோட முதலீடே நாம்தான். 

இந்தியா உலக கோப்பையை வென்றுவிட்டதாம். ஒரு பெரிய காக்காய் வலிப்பை உண்டாக்கிவிட்டு, கோடிக்கணக்கான ரசிகர்களை மாங்காய் மடையர்களாக்கிவிட்டார்கள். முதலில் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். கோப்பையை வென்றது இந்திய அணியே அல்ல. அது பி.சி. சி. ஐ. அணியாகும். அது ஒரு சங்கம். அந்த சங்கத்திற்கும் இந்திய அணி என்ற முத்திரைக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இல்லை. "நாங்கள் தனி சங்கம். எங்களுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. எங்களை அரசினால் கட்டுபடுத்த இயலாது" என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வாக்குமூலம் தந்தவர்கள் இந்த பி சி சி ஐ காரர்கள். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டிக்காக அணியை அனுப்ப மறுத்தவர்கள். இதனால் இந்தியாவிற்கு கிடைத்திருக்கக்கூடிய மேலும் ஒரு தங்கபதக்கம் ஸ்ரீலங்காவிற்கு கிடைத்தது. இப்படி தேசபற்று துளியுமில்லாமல் செயல் படும் ஒரு கொள்ளைக்கூட்டத்தின் அணியை நாம் தவறாக தலையில் வைத்து கொண்டாடுகிறோம். அந்த அணிக்கு எதிரான கருத்தை தெரிவித்தால் அது தேச விரோதம் என்ற அளவிற்கு மயங்கி கிடக்கின்றோம். 

இப்படி நாம் கிடக்கிறோம். அனால் நம்மை ஆள்வோர் என்ன செய்கிறார்கள். நாடு மக்கள் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல் அந்த கிரிக்கெட்டை காண முன்னணியில் அமர்ந்துக்கிடக்கிறார்கள். பிரதமர், குடியரசு தலைவர், எதிர்கட்சி தலைவர் என்ற வித்தியாசமில்லாமல் அங்கே வெட்கமில்லாமல் அமர்ந்து கிடக்கிறார்கள். நாம் எவ்வளவோ கேட்டும் இந்திய சார்பாக அணியை அனுப்ப மறுத்த ஒரு சங்கம், தங்களுக்கும் அங்கீகர இந்திய அணிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வெளிப்படையாகவே கூறும் ஒரு சங்கம், அவர்கள் நடத்தும் போட்டிக்கு செல்ல இந்த தலைவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ. இதில் யாருக்கும் வெட்கமில்லை. உண்மையில் இந்தியாவின் பேரையும், கொடி போன்ற சின்னங்களையும் அவதூறாக பயன்படுத்தியதற்காக அந்த சங்கத்திற்கு நோட்டீசு அனுப்பியிருக்க வேண்டும். இந்திய மண்ணிலும் அந்நிய மண்ணிலும் அவ்வாறு நடக்க தடை விதித்திருக்க வேண்டும். இவர்கள்தான் வெட்கம் கேட்டவர்கலாயிற்றே. நாளையே அல் கொய்தா நடத்தும் போட்டியிலும் பங்கேற்பார்கள் யார் கண்டது.