Sunday, April 3, 2011

மகாபலி மன்னன் என்ன பாவம் செய்தானோ?

வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் தன்னை மகாபலி மன்னனோடு ஒப்பிட்டுக்கொண்டு, தாம்  அவரைப்போல் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அதை பொறுக்காத கும்பல் பூணூல் உருவிக்கொண்டு அவர் ஆட்சியை கலைக்க வருவதாகவும் பொருமியுள்ளார். அவர் தேர்தல் (௦02/04/2011)பொதுக்கூட்டத்தில் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அது அவர் உரிமை. கேட்கவந்த மக்கள் தலையெழுத்து. இடையில் நாம் யார்? ஆனால் அதற்காக நம் புராணத்தை தவறாக திரித்து கூறும்போது அதை கண்டித்து ஒரு விளக்கம் கூட தெரிவிக்கா விட்டால் நாம் இருந்து என்ன பயன்?

முதலில் ஒரு விளக்கம். பகவான் குள்ள உருவம் கொண்டு வாமனாக வந்து மகாபலி மன்னனிடத்தில் மூன்றடி மண் கேட்டான்? அவனுடைய குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் தர வேண்டாம் என்று தடுக்கிறார். மகாபலி மன்னன் சிறிதும் கேளாமல், தன் கையாலேயே நீரை விட்டு தானமாக தருகிறான். நீர் கிண்டியிலிருந்து நீர் விழாமலிருக்க வண்டு உருவம் கொண்டு சுக்கிரர் அடிக்கிறார். இதை அறிந்த பெருமான் சிறு தருப்பை புள் கொண்டு அந்த கிண்டியின் ஓட்டையை குத்தும் பொழுது சுக்கிரரின் பார்வை பரி போகிறது. பிறகு திரிவிக்ரமனாக உரு கொண்டு பூமியையும் ஆகாயத்தையும் ஈரடியில் அளந்து, மூன்றாவது அடி எங்கே என்று கேட்க மகாபலியும் தனது தலையை காட்ட அவனை பாதாள உலகத்திற்கு அனுப்பிவைத்தான். இது பதினெட்டு புராணங்களில் வாமன மற்றும் பாகவத புராணங்களில் வருகின்றது. 

மகாபலி மன்னன், பரம பக்தனான பிரஹலாதனின் பேரன். மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். அவன் நல்லாட்சியே நடத்தி வந்தானாயினும், அவனை சார்ந்தோர் தேவர்களுக்கு மிகவும் இன்னலை தந்தார்கள். வேதமுறைப்படி நடைபெற வேண்டிய நேம நிஷ்டைகள் அங்கே தடை பட்டன. இந்த காலகட்டத்தில் தான் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு அதிதி என்ற தாயின் வயிற்றில் வாமனனாக பிறக்கின்றார். அதிதியின் மகன் என்பதால் அவர் ஆதித்யன் என்றும், இந்திரனுக்கிளையவன் என்கிறபடியால் உபேந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். பகவான் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பி அங்கே அவனுக்கு மிகச்சிறந்த அரச உரிமையை அளித்தார். மாறாக அவனை கொல்லவில்லை. உன்னுடைய வம்சாவழியினருக்கு என்னால் எந்த ஒரு தீங்கும் நேராது என்று பிரகலாதனுக்கு அளித்த வரத்தின் படியே அவனுக்கு அருள் பாலித்தார். இதுதான் புராணம் தரும் செய்தி.

இப்போது நம்ம கதைக்கு வருவோம். மேற்கூறிய புராண கதைக்கும் கருணாநிதிக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? வட தென் துருவங்களுக்கிடையேயான வித்தியாசம்தான் இருக்கிறது. 

1. கருணாநிதியோ நாத்திகன். புராணங்களை ஏற்காதவர். பழிப்பவர். கிண்டல் செய்பவர். அவை கற்பனை என்று முழங்குபவர். அந்த வரிசையில் மகாபலியும் இவர் கணக்கில் கற்பனைதான். இல்லாத விஷயம்தான். அதனோடு தன்னை ஒப்புமை படுத்துகிறார் என்றால் அவரின் அறிவை பற்றி என்னெவென்று புகழ்வது. 

மகாபலியோ ஆத்திகன். பிரகலாதனின் பேரன். பகவான் விஷ்ணுவின் பரமபக்தன்.       

2. கருணாநிதி செய்வது ஆட்சி என்ற பெயரில் நடக்கும் அலங்கோலம். தமிழர்களை தன்மானம் இழக்க செய்து பிச்சைக்கார கும்பலாக அண்டை அயலாரிடம் வேடிக்கை பொருளாக்கிவிட்ட அதிசயம். அனால் மகாபலி செய்தது மிகச்சிறந்த ஆட்சி. அவன் பாதாள லோகம் சென்றும் மக்கள் அவனை காண அவள் கொள்ளும் அளவுக்கு மிகச்சிறந்த ஆட்சி. 

3. கருணாநிதி தன் குடும்பத்திற்காக உழைப்பவர். மகாபலி பிறருக்காக உழைப்பவர். 

4. தன்னை ஒழிக்க பூணூலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் வருவதாக கற்பனையாக ஒரு புரளியை கிளப்பிவிட்டவர் கருணாநிதி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். இவர் எதிர்ப்பதாக கூறும் ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ, கம்யூனிஸ்டுகளோ, முஸ்லிம் அமைப்புகளோ, புதிய தமிழகமோ, சரத் குமார் போன்றோரோ பூணூல் அணிந்திருக்கவில்லை. இவரின் தேர்தல் தில்லுமுல்லுக்கு துணை போகாத, கிடுக்கிப்பிடி போட்டிருக்கும் தலைமை தேர்தல் அதிகாறு திரு. குரைஷியோ, மாநில அதிகாரி திரு. பிரவீன் குமாரோ கூட பூணூல் போட்டிருக்கவில்லை. பிறகு இவர் யாரைத்தான் கூறுகிறார். அவருக்கே வெளிச்சம். 

அனால் மகாபலியை அகற்ற பூணூல் உருவிக்கொண்டு யாரும் வரவில்லை. வாமனனும் யாசகம் பெற வந்தானேயன்றி படை எடுத்து வரவில்லை. சொல்லப்போனால் சுக்கிராசார்யார் என்ற பூணூல் காரரின் பேச்சை கேட்காததின் விளைவைத்தான் மகாபலி அனுபவித்தான். இங்கே அந்த பூணூல் தான் காக்க முன்வந்தது.  

இந்த விஷயத்தில் ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்ளது. மகாபலி கேரளாவை ஆண்டதாக அம்மாநில மக்கள் நம்புகிறார்கள். அது அவனுடைய சொத்து என்பது அவர்களின் நம்பிக்கை. இத்தகைய ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்கும் வந்து தொலைக்கவேண்டும். தமிழகம் முழுமையும் கருணாநிதியின் குடும்ப சொத்தாக வேண்டும் என்று இவர் கனவு காண்கிறார் போலிருக்கிறது. 

இப்படி சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களை, தமக்கும் எல்லாம் தெரிந்த மாதிரி கற்பனை செய்து கூறுவது ஒரும் அதிசயமில்லை. வயசாகிவிட்டால் உளறத்தானே செய்வார்கள். 
  

No comments:

Post a Comment