Saturday, August 27, 2011

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கணுமாம்!

ஒரு குற்றம் நடந்து அது முறைப்படி இந்திய அரசியல் சட்ட விதிகளுக்குட்பட்டு, சிறப்பிற்குரிய இந்திய நீதி மன்றங்களினால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த தீர்ப்பினை நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றமும் உறுதி செய்துவிட்டபின்னரும், மக்களாட்சியின் அடையாளமாக குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரத்தின் படி கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நம்ம ஊரு சட்ட மாமேதைகளும், தமிழ் பற்றாளர்கள் என காட்டிக்கொள்ளும் விளம்பரப்பிரியர்களும் ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் விடுவிக்க வேண்டி போராடுகிறார்கள். மரணதண்டனையே கூடாது என்று முழங்குகிறார்கள். கொலைக்குற்றத்திற்கு எதிராக மரணதண்டனை அளிப்பது கொலைக்கு கொலை என்ற வகையாம். இவர்கள் செய்யும் காமிடிக்கு அளவில்லாமல் போய்விட்டது.

ராஜீவை கொன்றவர்கள் சிறிதும் கருணையில்லாமல்தான் அந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். தவிர இந்நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்று இந்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்டவர்கள். இதில் தமிழ் பற்று இனப்பற்று என்று உணர்ச்சி பூர்வமான விஷயங்களுக்கு இடமில்லை. ராஜீவை கொன்ற கூட்டத்தினர் அதற்கு முன்பு எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றிருக்கிறார்கள். தங்கள் தலைமைக்கு சவால் விடும் அளவிற்கு இருக்கிற தீவிர மற்றும் மிதவாத தமிழ் போராளிகளை ஈவிரக்கமின்றி கொன்றவர்கள். இவர்களுக்கு கருணை காட்ட வேண்டுமாம். இங்குள்ள சாத்தான்கள் வேதம் ஓதுகிறார்கள். இதில் என்ன பெரிய தமாசு என்றால் நம்முடைய தமிழ் வித்தவர், "சோனியா காந்தி இதில் தலையிட்டு  அந்த மூவரையும் காக்க வேண்டும்" என்கிறார். எப்படி இருக்கிறது கதை. தன் மகள் சிறையில் வாடுவதையே பொறுக்காத இந்த தமிழின துரோகத்தலைவர் கணவனை இழந்து வாடும் பெண்மணி கணவனை கொன்றவர்களுக்கு இறக்கம் காட்ட வேண்டுகிறார். இவர் மீண்டும் சிலைவைத்து சிறப்பு செய்த கண்ணகிகூட கணவனை கொன்ற மன்னனை மற்றுமல்லாமல் அவன் தலை நகரையே தீக்கிரையாக்கினாள். அவளே காட்டாத இரக்கத்தை சோனியா காட்ட வேண்டுமென்பது கேட்ககூட சகிக்கவில்லையே?


ராஜீவை இந்த கொலையாளிகள் கொன்றதை தட்டிக்கேட்காத கூட்டம், அவருடைய கொலையை புகழ்ந்த கூட்டம், கொலைக்குற்றவாளிகளை புகழ்ந்து தள்ளிய கூட்டம், தமிழின துடைப்பாளி கொலைக்காரன் ராஜபக்சேவை நேரில் சந்தித்து புகழ்ந்து, கைகுலுக்கி, பரிசுப்பொருள் பெற்று வந்து, இலங்கையில் தமிழருக்கு எந்த அநியாயமும் நடைபெறவில்லை என்று அநியாயத்துக்கு பேட்டிக்கொடுத்த கூட்டம் இன்று ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு கோருவது மனித இனத்திற்கே விரோதமான செயல் என்பது ஊரறியும். 

இவர்கள் தமாசுகளை நீங்கள் நாள்தோறும் படியுங்கள், சிந்தியுங்கள் பிறகு வாய்விட்டு சிரியுங்கள். சினிமாவில் காமெடியனுக்கு சிறப்பான பாத்திரம் அளிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லையென்றால் சினிமா சிறப்பாக இருக்காது, மக்கள் கூட்டமும் வராது. அது போன்று இன்றைய அரசியலையும் நாம் ரசிப்பதற்கு இத்தகைய கோமாளிகள் தேவை. தொடர்ந்து சிரியுங்கள். 

Saturday, August 13, 2011

இந்தி படத்துக்கெதிராக போராட்டம்

"ஆரக்ஷன்" என்று ஒரு இந்தி படம் ரிலீஸ் ஆயிருக்கு. அமிதாப் பச்சன் அதுல நடிக்கிறாரு. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனமும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறதா சொல்லி அதை சில மாநிலங்கள்ல தடை செஞ்சிட்டாங்க. சில இடத்துல ஆர்பாட்டம் பண்றாங்க. இட ஒதுக்கீட்டு பிரச்சனை ஒன்னும் விவாதத்திற்கப்பாற்பட்ட விஷயமில்லை. அதுவும் பேச்சு, எழுத்து சுதந்திரமுள்ள நாட்டில் யாரும் எதுவும் பேசலாம், செய்யலாம். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது, அவ்வளவுதான். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடப்பதை போல, எதிர்ப்பதும் சுதந்திரம்தான். அது போக கண்மூடித்தனமாக இட ஒதுக்கீடு தொடரவும் கூடாது அல்லவா! இதில் நியாயம் இல்லாமலில்லையே. உயர்ந்து விட்டவன் மென்மேலும் தன்னையே வளப்படுத்திக்கொள்ள கூடாது. தமது பிரிவில் உள்ள மெலிந்துபோன பிறருக்கு இடம் விட்டு ஒதுங்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும். இது ஒரு சாதியிலேயே பிளவை உண்டாக்கி விடும் என்பது சாதியை அடிப்படியாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களின் பயமாக இருக்கலாம். அப்படியாவது சாதி என்ற பேய் தொலையாதா என்ற எதிர்பார்ப்புத்தான் நமக்கு இருக்கிறது. சரி நியாய அநியாயங்கள் இருக்கட்டும். இங்கே நாம் சொல்லவந்த விஷயமே வேறு.

சென்னை சத்தியம் தியேட்டர் வாசலில் ஒரு கும்பல் கோஷம் போட்டிருக்கிறது. இன்னொரு கும்பல் கோவையில் ஒரு தியேட்டரில் திரையை கிழித்திருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், இவர்கள் யாருக்கும் இந்தி தெரியாது. இந்தி தெரிந்து படம் பார்க்க போனவன் எவனும் இட ஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாது. இதெல்லாம் தெரிந்தும் இவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணக் காரணம், கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில் சொல்வது போல 'எல்லாம் ஒரு விளம்பரம்' அவ்வளவே. இவர்களுக்கு தைரியமிருக்குமானால் தங்கள் தங்கள் அரசியல் மற்றும் சாதிக்கட்சி தலைவர்களை விட்டு "எங்கள் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம், நாங்கள் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டோம், அந்த இடத்தை எங்கள் சாதியிலேயே பின் தங்கிய நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம்"  என்று அறிக்கை விட வேண்டியதுதானே. 

ஜனநாயகத்தின் (உளுத்துப்போன) நான்காவது தூண்

சன் டி.வி. யில் வாரநாட்களில் காலை எட்டு மணிக்கு "வாங்க பேசலாம்" என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பட்டிமன்ற புகழ் ராஜாவும், பாரதி பாஸ்கரும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாட்களில் நன்றாக இருக்கும். சில நாட்களில் மிகவும் போரடிக்கும். ஆனால் மொத்தத்தில் தகவல்கள் தரும்படி இருக்கும். இப்படித்தான் 08/07/2011 அன்று இப்போதெல்லாம் யாரும் பத்திரிக்கைகளை அவ்வளவாக விரும்பி படிப்பதில்லை என்றும், குழந்தைகளிடம் இந்த பழக்கத்தை நாம் வளர்க்க வேண்டும் என்றும் இதனால் விழிப்புணர்வு வளர்ந்து ஜனநாயகம் காக்கப்படும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இதை கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. இவர்கள் இந்தியாவில் இல்லாமல் வேற்றுலகில் எங்காவது வாழ்கிறார்களா என்கிற சந்தேகம் வந்தது. ஏனென்றால் இன்றைய பத்திரிக்கைகள் நடந்துகொள்ளும் போக்கை பார்த்தால் இன்னும் எப்படி ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது என்கிற வியப்புத்தான் மேலிடுகிறது. 

பத்திரிகை உலகத்தைத்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லுவார்கள். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை கவனமாக பார்த்து மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதோடு ஜனநாயக விளக்கு அணைந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் மிகப்பெரிய பணி பத்திரிக்கைக்கு உண்டு என்பதால்தான் அவ்வாறு கூறுகிறார்கள். அப்படியொன்றும் நம்ம ஊரு பத்திரிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் அதை கொள்ள நினைக்கும் பாதகர்களுக்கு துணைபோகவே செய்கின்றன.

விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் என்றொரு திரைப்படம். அதில் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பத்திரிகை உரிமையாளர். அரசியல்வாதிகள் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார். என்னுடைய பத்திரிக்கையை படித்துத்தான் மக்கள் நிலவரத்தை தெரிந்து கொள்ளவேண்டும். அத்தகைய நிலவரத்தைத்தான் நான் உருவாக்க வேண்டும் என்று கொக்கரிப்பார். மாற்று பத்திரிக்கைகளின் குரல்வளையை தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நெரிப்பார். இன்று இந்தியாவில் ஏறத்தாழ பத்திரிக்கைகள் இப்படித்தான் செயல் படுகின்றன.

பரபரப்புக்கு எதையாவது எழுதி தள்ளுவது. அதில் உண்மை இருக்கிறதா என்று உணர்வதில்லை. படிக்கும் தலைமுறை எக்கேடுகேட்டாவது போகட்டும் என்று ஆபாசம், வன்முறை, சினிமா கிசு கிசு அநாகரீக அரசியல் செய்திகள் என்று சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். பத்திரிகை தர்மம் என்று எதுவும் கிடையாது. ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டு அவர்கள் சொல்லுவதை எழுதுவது. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காதது, அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களின் வருமானத்திற்காகவும், அண்டி பிழைத்து காரியம் செய்து கொள்வதற்காகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதுகின்றன இன்றைய பத்திரிக்கை உலகம். கருணாநிதி ஆட்சியில் இருந்த பொது இவர்கள் என்றாவது உண்மையை எழுதியிருக்கிறார்கள? வடநாட்டு மீடியாக்கள் செயல்பட்ட அளவிற்கு கூட இவர்கள் 2G விவகாரத்தை பிரசுரிக்கவில்லை. கருணாநிதி ஆட்சிக்கு திரும்ப வரமாட்டார் என்று அவரே நினைத்திருந்த நேரத்தில் கூட இவர்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் என்று போலியான கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சுமார் 2400 க்கும் மேற்பட்ட நிலா அபகரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் சில போலியாக இருக்கலாம், சில வஞ்சம் தீர்க்க பதிவானவையாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை வழக்குகள் உண்மையாக இருக்கலாம். இத்தகைய உண்மையை அன்றைய ஆட்சியின்போது பத்திரிகை உலகம் கண்டும் காணாமல் இருந்தது. 

இன்று நாட்டை பல பிரச்சனைகள் வாட்டி வதைக்கின்றன. விவசாய நிலபரப்பு குறைதல், விவசாயத்துக்கு தேவைப்படும் நீர், உரம், விதை பற்றாக்குறை, மின் உற்பத்தி பாதிப்பு, பலவித நோய்கள் தொற்றுதல், மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை கேன்சர் போல பரவிக்கிடக்கும் ஊழல் என்று எதையாவது இவர்கள் எழுதுகிறார்களா என்றால் இல்லை. மாறாக நடிகர் நடிகையர், அரசியல்வாதிகளின் பேட்டியை கட்டம் கட்டி பிரசுரித்து இளம் தலைமுறையை கேடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஒரு எழுச்சி எமர்ஜென்சிக்கு எதிராக எழுந்த போது தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. அப்படிப்பட்ட பணிகளை இன்று எந்த பத்திரிக்கைகள் செய்கின்றன. இன்றைய பத்திரிக்கைகள் காங்கிரஸ், பி.ஜே.பி. கம்யுனிஸ்ட் என்று பிளவு பட்டு நிற்கின்றன. ஆனால் நாட்டின் நன்மைக்காக யாரும் அதன் பக்கம் யாரும் நிற்பதாக தெரியவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, திரு.ராஜாவும் திருமதி.பாரதியும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முழங்கிக்கொண்டிருந்தது கேட்க பரிதாபமாக இருந்தது.