Monday, October 31, 2011

எப்படித்தான் எண்றாங்களோ!

இன்றையதினம் (31/10/2011) உலகின் எழுநூறாவது கோடி குழந்தை, நர்கிஸ் உ.பி. தலைநகர் லக்னோவை சார்ந்த வினிதா-அஜய் தம்பதியினருக்கு பிறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு நிமித்தமான (Symbolic) அறிவிப்புத்தான் என்றாலும், இத்தகைய செய்திகளை கேட்கும் பொழுது நமக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதுவும் ஒரு ஆண்டு காலம் நடக்கிறது. இதில் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் யார் முதலில் யார் கடைசியில் என்ற பேச்சுக்கே இடமில்லை. குடியரசுத்தலைவருக்கு மட்டும் தான் நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்து உள்ளது. ஆனால் கடைசி குடிமகன் என்று யாரும் இல்லை, அப்படி யாரையும் குறிப்பிடுவது கிடையாது. மேலும் இந்த கணக்கெடுப்பு முறையே சரிவர நடத்தப்படுவதில்லை. சில வீடுகளை, தெருக்களை, விட்டுவிட்டுதான் இந்த கணக்கெடுப்பு பணியே அரைகுறையாக செய்கிறார்கள். மேலும் சமீப சில ஆண்டுகள் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தாமல் இருந்தார்கள். 

ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் எந்த குழந்தை எத்தனையாவது என்று யாரும் தேடி கண்டு பிடிப்பதில்லை. பொத்தம் பொதுவாக சொல்வதுதான். இப்படிப்பட்ட நிலையில் லக்னோவை சார்ந்த இந்த குழந்தைதான் எழுநூறாவது கோடி என்று எப்படித்தான் சொல்கிறார்களோ? இதை நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டுமாம். இதில் என்ன பகுத்தறிவு உள்ளதோ? எது எப்படியோ அந்த குழந்தை ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்டது. "நர்கிஸ் நூறாண்டு காலம் வாழ்க" 

Saturday, October 29, 2011

மாதம் மும்மாரி பொழிகிறதா?

நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்து நாடகங்களில் மன்னர் மந்திரி பிரதானிகளை பார்த்து கேட்கும் கேள்வி "அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?" மந்திரியாரும் "ஆம் அரசே! பொழிகிறது" என்பார். கேட்க விந்தையாக இருக்கும். ஆயினும் மக்களுக்கு அரசர், மந்திரி போன்ற பாத்திரங்களை அறிமுக படுத்த இத்தகைய வசனங்கள் இடம் பெறுவது சகஜம். ஆனால் அதே வசனங்கள் நடை முறையில் இடம் பெற்றால், நம்மை பார்த்து பிறர் எள்ளி நகையாடுவார்கள். அவற்றை பொருட்படுத்தாமல் இருந்தால், அவர்கள் வடிகட்டிய அரசியல்வாதிகள். அதையும் பொருட்படுத்துபவன் வடிகட்டிய இளிச்சவாயன். ஆம் ஓட்டு போடும் இயந்திரங்களாகிய நம்மைத்தான் சொல்கிறேன். அப்படிப்பட்ட நகைச்சுவை வசனங்களை கேட்கும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டது. 

இன்று (29/10/2011) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது "Star News" தொலைக்கட்சியில் இடம் பெற்ற செய்தியாவது: உணவு மந்திரி திரு. கே. வி. தாமஸ், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை சந்தித்தார். அப்பொழுது விலைவாசி ஏற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சோனியா கேட்டார். விலைவாசி உயர்விற்கு பல காரணங்கள் இருப்பதாக மந்திரி சொன்னதுடன் அவற்றை பட்டியலிட்டார். சரி! விலைவாசி உயர்வை விரைவில் கட்டுக்குள் கொண்டுவாருங்கள் என்று சோனியா மந்திரியை கேட்டுக்கொண்டார் என்று முடிந்தது செய்தி. கேட்டதும் பழைய நாடக பாணி வசனங்கள் தான் மனத்திரையில் ஓடியது. 

இவர்கள் நம்மை முட்டாள், மூடன், மடையன், சாம்பிராணி, ஜடம், இளிச்ச வாயன்கள் என்று முடிவு கட்டி விட்டார்கள். கோபாலா! ஏன் சார். எங்கே போரே? கடைக்குப்போறேன். என்கிற பாணியில் வசனங்களை அடுக்குகிறார்கள். விலைவாசி உயர்கிறது, அதற்கு என்ன கரணம், அதை வரம்பிற்குள் கொண்டுவர கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்கிற எந்த ஒரு தகவலும் அம்மையாருக்கு தெரியாது பாருங்கள்! மந்திரியை கேட்டுத்தான் தெரிய வேண்டும். இந்த லக்ஷணத்தில் அவர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தின் தலைவி வேறு. சமீபத்தில்தான் நிதி அமைச்சர் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைப்பதுதான் எப்படி என்பது தெரியவில்லை என்று வெளிப்படையாகவே அங்கலாய்த்தார். பிரதம மந்திரி என்கிற புண்ணியவான் பரவாயில்லை. அவர் ஏதோ பாகிஸ்தானுக்கோ, அமெரிக்காவுக்கோதான் தாம் பிரதமர் என்பது போல  இந்நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்பொழுது கவலை தெரிவிப்பதோடு சரி. மற்றபடி அம்மையார் போல வசனங்களை அடுக்க மாட்டார். 

என்ன செய்வது இவர்கள் எல்லாம் நம்மை ஆள்பவர்கள். லாலு சொன்னது போல தெய்வம்தான் வண்டியை ஒட்டிக்கொண்டிருக்கிறது.      

Monday, October 24, 2011

வடி(யா)வேலு!

தமிழர்கள் உணர்வு பூர்வமானவர்கள் (Sentimental) மற்றும் நகைச்சுவை (Jovial) மிக்கவர்கள். நான்கு பேர் ஒன்று கூடி பேச நேர்ந்தால் அரட்டை அடிப்பது இயல்பான ஒன்று. அதிலும் நகைச்சுவை எண்ணத்தை வெளிப்படுத்தாத அரட்டைகளே இருக்க முடியாது. அலுவலகங்கள், வீடுகள், தெருமுனைகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் என்று எங்கு பார்த்தாலும் கிண்டல், கேலி, என்று பேச்சில்லாத இடங்களே இருக்க முடியாது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று சகலரும் ரசிப்பது இந்த நகைச்சுவை கெலாட்டக்களைத்தான். அப்பா அம்மாவையும், அம்மா, மாமியாரையும், அத்தை, மாமன்களையும், பிள்ளைகள் ஆசிரியர்களையும் வைத்து செய்யும் கெலாட்டக்கள் சொல்லி மாளாதவை. செய்தி, திரைப்படம், பாட்டு என்று பல இருந்தாலும் நகைச்சுவை தொலைக்கட்சிக்களை பாராத இல்லங்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு தமிழர்கள் வாழ்வுடன் பின்னி பிணைந்தது. தெருக்கூத்துக்கலையானாலும் அங்கே ஒரு பபூன் இருப்பான். திரைப்படங்களில் நாகேஷ், தங்கவேலு, கருணாநிதி, பாலையா, காளை என். ரத்தினம், சந்திரபாபு, மனோரமா, முத்துலட்சுமி, சச்சு, உசிலைமணி, கவுண்டமணி, செந்தில், ஜனகாராஜ், எஸ்.வி. சேகர், லூசு மற்றும் கிரேசி மோகன்கள், கோவை சரளா, விவேக், சந்தானம், மற்றும் பெயர் மறந்துபோன சிலபேர் என்று ஒரு நீண்ட பட்டியலே தமிழர்கள் வசம் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு தொன்மையான பாரம்பரியத்தில் சமீபத்திய தமிழர்களை மிகவே ஆராதித்தவர் வடிவேலு ஆவார். இவர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். போற்றப்பட்டார். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்து என்னும் அளவிற்கு ரசிக்கப்பட்டார். 

பேச்சு பேச்சா இருக்கட்டும், வானா வலிக்குது, ஹய்யோ ஹய்யோ, வரும் வராது, மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு, என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு, வட போச்சே, சிங் இந்த ரெயின், கடுப்பேத்தறார் மை லார்ட், போன்று எத்தனையோ வார்த்தைகள் இன்று அன்றாடம் மக்கள் நடுவில் கையாளப்படுகின்றன. அந்த அளவிற்கு மக்கள் அவரை பெரிதும் விரும்பினார்கள். எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும், பல பிரபலங்கள் நகைச்சுவை படையலே இட்டிருந்தாலும், வடிவேலுவை மக்கள் உள்ளத்தில் ஏந்தியது போல வேறு எந்த கலைஞனுக்கும் இத்தகைய பதவியை தந்ததில்லை. கதாநாயக கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் பலதரப்பட்ட பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடிகர் திலகம் திகழ்ந்தார் எனில், நகைச்சுவை உலகில் அத்தகைய பாத்திரத்திற்கு ஏற்றவராக திகழும் ஒரே நகைச்சுவை கலைஞன் வடிவேலு மட்டுமே. அரசன் முதல் ஆண்டி வரை, கல்லூரி மாணவன் முதல் வெட்டியான் வரை என்று சகல வேடங்களுக்கும் பொருத்தமான ஒரே ஆள் இன்றைய உலகில் வடிவேலுதான். அவருடைய சேட்டைகள் (Body Language) மட்டுமே திரையில் தோன்றிய உடனே குபீர் சிரிப்பையும் மக்களிடத்தில் ஒரு எதிர்ப்பார்ப்பையும் தோற்றுவிப்பதாய் அமைந்து விடுகின்றன. அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பொழியும் பாணியே தனி. அதிலும் மனமொழி (உதட்டசைவின்றி பின்புலமாக ஒலிப்பது) மற்றும் முனகல் தனி ரகம். 

ஆனால் அந்தோ பரிதாபம்! சுமார் ஒரு ஆண்டு காலமாகிறது, வடிவேலுவின் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவரை கிட்டத்தட்ட ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அவர் செய்த தவறு கடந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்களை விமரிசித்து பிரச்சாரம் செய்தது மற்றும் அவரை எதிர்த்தது. இதனால் வடிவேலுவிற்கு புதிய படங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அவருடைய வருமானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதைவிட மிகப்பெரிய இழப்பு தமிழர்களுக்கும், தமிழ் கலைத்துறைக்கும்தான். அவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. அவருக்கு மாற்றாக எண்ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திணிக்கும் கலைஞர்கள் சம்பளத்தை வேண்டுமானால் கூட்டிக்கொள்ளலாம். ஏதோ எழுதியதை திரையில் வாந்தி எடுத்துவிட்டு செல்லலாம். ஆனால் அவர்கள் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை மறந்து விடக்கொடாது. தமிழக திரைத்துறையில் ஒரு ஆண்டு என்பது மிகப்பெரிய இடைவெளி. அந்த நேரத்தில் போட்டியாளர்கள் நுழைந்து காணாமல் செய்து விடுவார்கள். இருப்பினும் தமிழக ரசிகர்கள் வடிவேலுவை இன்னும் மறந்த பாடில்லை. இதற்கு இன்றைய தொலைக்காட்சிகளே சான்று. நகைச்சுவை தொலைக்காட்சிகள் மட்டும் அல்லாது பிற தொலைக்காட்சிகளும் வடிவேலுவின் நகைச்சுவை துணுக்குகளை ஒளிப்பரப்பாத நாளில்லை. அவர் எப்போதோ நடித்து வெளிவந்து, நாமும் பலதடவை பார்த்து முடித்த காட்சிகளையே அவர்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்  . அதன் பின்னர் எத்தனயோ புதிய திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. ஆயினும் அவற்றை விட வடிவேலுவை காட்டுவதிலேயே அவர்களும் பிரியப்படுகிறார்கள். ரசிகர்களும் இது ஏற்கெனவே பார்த்தாகிவிட்ட காட்சி ஆயிற்றே என்று ஒதுக்க வில்லை. அவற்றையே திரும்ப திரும்ப காண்பதில் ஆர்வம் கொள்கிறார்கள். 'சினேக் பாபு' வாகட்டும், அல்லது இன்ன பிற காட்சிகளாகட்டும் அவற்றில் ரசிகர்களுக்கு சலிப்பு இன்னமும் ஏற்படவில்லை. ஆகவே அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. 

வடிவேலுவிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும், தமிழ் கலைத்துறைக்கும் ஏற்பட்டிருக்கிற இழப்பு. இன்றைய அரசியல் மற்றும் கலைத்துறையினர் தாமாக முன்வந்து வடிவேலுவிற்கு மீண்டும் காட்சிகள் வழங்க இந்த நகைச்சுவை உணர்வு மேம்படவும், மேலோங்கி தழைக்கவும் வகை செய்ய வேண்டும்.           

Wednesday, October 19, 2011

நல்ல பெயரை வாங்க வேண்டும்!

இந்த உலகில் நாகரீகம் தோன்றிய காலம் முதல் மனிதனுக்கு பிடித்தமான பொருட்களில் இடம் பெறுவது அவனுடைய பெயர்தான். ஒருவருக்கு பெயரை விட மிகவும் பிடித்தமான பொருள் ஒன்று இருக்க முடியாது. நாம் புதிய பேனா வாங்கும் பொழுது கிறுக்கி பார்ப்பது பெயரைத்தான். பழங்கால மண்டபங்கள், கோயில்கள், கற்பாறைகள், உத்தரங்கள், மரங்கள் என்று எங்கே பார்த்தாலும் யாரோ ஒருவர் தன்னுடைய பெயரை செதுக்கி வைத்திருப்பார். அந்த அளவிற்கு வசீகரமும் ஈடுபாடும் உடையது பெயர். ஒருவரின் பெயரை சரியாக உச்சரிக்க விட்டாலோ, தவறாக எழுதினாலோ நாம் ஒவ்வொருவரும் மிகுந்த வருத்தம் கொள்கிறோம். நம்முடைய முதல் எழுத்தை தவறி எழுதிவிட்டால் கூட நமக்கு ஆத்திரம் வருகிறது. நம்மை விட வயதிலோ, அனுபவத்திலோ, ஆற்றலிலோ, பதவியிலோ, பொருளாதாரத்திலோ எளியவர்கள் நம்முடைய பெயரை சொல்லி அழைத்தால் கூட நாம் அதை அவமரியாதையாக கொள்கிறோம். நம் பெயரை காலங்காலத்துக்கும் நிலை நிறுத்த நம் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசுகள் கூட பெயரன் என்றே அழைக்கப்படுகிறார்கள். இந்த அளவிற்கு நம்முடைய வாழ்வுடன் பின்னி பிணைந்தது நம்முடைய பெயர்.  அந்த பெயரை நாம் எப்படி கையாள்கிறோம் எப்படி அவை இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு அலசல். 

பொதுவாக தமிழர் மரபாவது பெயரை குறிப்பிடும் பொழுது சொந்த ஊரையும்  சேர்த்து கூறுவதுதான். சீத்தலை சாத்தனார், மோசி கீரனார், இளையான்குடி மாறனார், சேரமான் இரும்பொறை என்று பல பெயர்களை குறிப்பிடலாம். அதன் பின்னர் ஊருடன் தந்தையின் பெயரையும் சேர்த்து இன்னார் மகன் இன்னார் என்று அடையாளம் காணப்பட்டன. அதன் பின்னர் குடும்ப பெயர் என்று குறிப்பிடப்பட்டு இன்றைய ஜாதிகளையும் சேர்த்து குறிப்பிட்டார்கள். இப்படி பலவேறு மாற்றங்களை கண்ட பெயர்கள் இன்று பெயருக்கு பின்னர் தந்தையாரின் முதல் எழுத்தை மட்டும் சுமந்து வரும் அளவிற்கு சுருங்கி விட்டது. இந்த பெயர் கூட இன்று படும் பாட்டை பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது. 

நம் தமிழ்நாட்டில் முதல் பெயர், இடைப்பெயர், கடைசிப்பெயர் என்று எதுவும் இல்லை. J. ஜெயலலிதா அல்லது ஜெயலலிதா J, என்று மட்டுமே குறிப்பிடுவார்கள். இதில் முதல் இடை கடை என்று கோடிட்டு காட்ட மாட்டார்கள். ஆனால் அதையும் வடநாட்டவரோ அல்லது முதல் பெயர் கடைசி பெயர் என்று குறிப்பிடும் வகையை சார்ந்தவரோ எப்படியெல்லாம் கொள்கிறார்கள் பாருங்கள். R. அன்புமணி (அதாவது ராமதாஸ் மகன் அன்புமணி) என்கிற பெயரை வடநாட்டவர்கள் கொன்று போட்டார்கள். நமக்கு ராமதாஸ் வேறு அன்புமணி வேறு என்று தெரியும். ஆனால் அவர்களோ அன்புமணி ராமதாஸ் என்று அன்புமணியின் பெயரை விரித்து, காலப்போக்கில் அதையே A. ராமதாஸ் என்று அழைத்தார்கள். மத்திய அமைச்சர் திரு. ராமதாஸ் என்று சொல்லிக்கொண்டார்கள். நமக்கு ஒரே குழப்பம். ராமதாஸ் கட்சி தலைவர்தானே. அவர் மகன் அன்புமணிதானே மத்திய அமைச்சர். இவர்கள் என்ன ராமதாசை மத்திய அமைச்சர் என்று சொல்கிறார்கள் என்று சில காலம் குழம்பி கொண்டிருந்தோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி R. வெங்கடராமனை, ராமசாமி வெங்கடராமன் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படி தந்தையாரின் பெயர் முன்னாள் போடா வேண்டுமா பின்னால் போடவேண்டுமா என்று அவர்களுக்கும் புரியவில்லை, அதை வேடிக்கை பார்த்த நமக்கும் தட்டி கேட்க துணிவும் இல்லை. மாறனின் மகன் தயாநிதியை நாம் M. தயாநிதி என்று மட்டுமே சொல்லுவோம். அவர்களோ தயாநிதி மாறன் என்று சொல்லுகிறார்கள். அவரை அழைக்கும் பொழுது திரு. மாறன் என்கிறார்கள். திரு. தயாநிதி என்றுதானே சொல்ல வேண்டும். திரு. மாறன் என்றால் அவரது தந்தை அல்லவா வருவார்? இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு காரணம் அவர்கள் நம்முடைய பெயர்களையும் முதல் இடை கடை என்று பிரித்து எழுதி கூப்பிடுவதால்தான். அவர்களுக்கு சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதை S. R. டெண்டுல்கர் என்று எழுதி பழக்கம். சச்சின் என்று அழைத்து பழக்கம். இப்படிப்பட்ட பெயர்களுடன் நம்முடைய பெயரையும் ஒப்புமை படுத்தி நம்மையும் பாடாய் படுத்துகிறார்கள்.

ஆகவே தமிழர்கள் பெயரை தனிரகமாக கொண்டு நாம் எப்படி வழங்குகிறோமோ அப்படியே பிறமக்களும் அழைக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் முதல் பெயர் கடைசி பெயர் என்று பிரித்து எழுத சொன்னால் முதலில் நம்முடைய பெயரையும் கடைசியில் தந்தையார் (அல்லது தாயார்) பெயரையும் இடையில் இருந்தால் ஊர் பெயரையும் சேர்த்து சொல்வதே சரியாக இருக்கும். M. G. R. என்றே பிரபலமான திரு. மருதூர் கோபாலன் ராமச்சந்திரனை, ராமச்சந்திரன் மருதூர் கோபாலன் என்று எப்படி எழுத முடியும். அப்படி எழுதிய பெயரை R. M. கோபாலன் என்று வேற்று நாட்டவர் அழைப்பார்களே! இப்படியேதான் அவருடைய தனித்தன்மை காணமல் போய்விடுமே. ஆகவே நாம் எப்படி எழுதுகிறோமோ அப்படியே வழங்க வேண்டும். நம்முடைய பெயரை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடம் கூடாது. உங்கள் உருவத்தையும் குணத்தையும் அல்லவா அது தாங்கி செல்கிறது. அதை ஏனோ தானோ என்று கையாள எப்படி மனம் வரும்?  
   

Thursday, October 6, 2011

யார் காரணம்!

உள்ளாட்சி தேர்தல்(17 & 19 அக்டோபர் 2011) பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மூலாமூலைக்கு சென்று வேட்பாளர்கள் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி சார்பு வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் தலைவர்களும் உலா வருகிறார்கள். இந்த பிரச்சாரத்தில் அந்தந்த பகுதியின் தேவைகளை கருத்தில் கொண்டு அந்த பகுதி பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதுதான் வாடிக்கை. ஆனால் திரு. வைகோவும் திரு. ஸ்டாலினும் ஏதோ தமிழக சட்ட மன்ற தேர்தல் நடப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று மக்களை கேட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை பேசினால் பயனுள்ளதாக இருக்கும். 

எப்படி பேசுவார்கள்? இத்தனை நாட்கள் உள்ளாட்சி முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டில்தானே இருந்தது. இவர்களின் கட்சியினர் கொள்ளையடித்து உள்ளாட்சியை போண்டியாக்கி வைத்து விட்டார்களே! அதை சொல்லியா பிரச்சாரம் செய்ய முடியும்? கால்நடையாகவோ, சைக்கிளிலோ சென்றவநேல்லாம் கவுன்சிலராகி இன்று சுமோ, போலேரோ போன்ற வாகனங்களில் உலா வருவது வாக்களிக்கும் மக்களின் கண்களை உறுத்தாமல் இல்லை.  இவர்கள் பிரச்சாரத்தை நம்பி மோசம் போகக்கூடிய நிலையில் மக்கள் இல்லை. 

இதில் மேலும் ஒரு வேடிக்கை, திரு.வைகோ கூறியதுதான். "ஜெயலலிதா ஆட்சியில் ஒரு மாதம் பள்ளிக்கூடமே திறக்கவில்லை. இரண்டு மாதங்கள் புத்தகங்கள் வழங்கவில்லை. இவர்களுக்கு பாடம் புகட்ட உள்ளாட்சி தேர்தலில் எதிர்த்து வாக்களியுங்கள்" என்று முழங்கியிருக்கிறார் இந்த சிங்கத்தமிழன். சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா இவர்களுக்கு கூட்டணியில் பங்கு கொடுக்காத கோபம் இன்னும் இருக்கிறது போலும். இல்லையென்றால் இந்நேரம் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளியிருப்பரே! கர்ஜனைக்குரல் யாழ்பாணம் வரையிலும் எதிரொலித்திருக்குமே! சமச்சீர் கல்வியில் பள்ளித்திறப்பு, புத்தகம் வழங்களில் காலதாமதத்திற்கு ஜெயலலிதா மட்டும் காரணமா? இவர்களின் பங்கு ஒன்றுமில்லையா? அப்படி என்ன தவறை ஜெயலலிதா செய்துவிட்டார்?

அரசு பதவி ஏற்றவுடன் சமச்சீர் கல்வியை இந்தாண்டு நிறுத்தி அமைச்சரவை முடிவு செய்தது. கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவித்தது. ஜெயலலிதாவை எதிர்ப்பதையே கொள்கையாக கொண்ட இவர்களுக்கு ஒரு வருடம் கூட பொறுக்க முடியவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றார்கள். நம் நாட்டில் நீதிமன்றத்திற்கு சென்றால் உடனடியாகவா முடிவு கிடைக்கும்? நீதிமன்றத்தில் முடிவு வந்தபின் மேல்முறையீட்டில் உயர்நீதி மன்றம் சென்றது அரசு. அதையும் குறை கூறினார்கள். மேல்முறையீட்டு உரிமை இருக்கும் பொழுது அதை பயன்படுத்துவது எப்படி தவறாகும். உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியை அமல் படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. அதை உடனடியாக நடைமுறை படுத்திவிட்டது அரசு. இதில் அரசின் காலதாமதம் எதுவும் இல்லை. காலதாமதத்திற்கு காரணம் எதிர் கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றதுதான். செல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு காலதாமதமில்லாமல் வகுப்புகள் நடந்திருக்கும். குறைகளை களைந்து அடுத்த ஆண்டு சிறந்த கல்வி திட்டம் அமல் படுத்தப்பட்டிருக்கும். இதில் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்பட்டிருக்காது. 

தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்றும், தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றும், தங்கள் விருப்பமே உடனடியாக நிறைவேறவேண்டும் என்று எதிர் கட்சிகள் வானத்திற்கும் மண்ணுக்கும் குதித்த குதிப்பில் பல குறைபாடுகளுடன் சமசீர்கல்வி என்ற பெயரில் தமிழக குழந்தைகளின் படிப்பு வீணாகும் திட்டம் நடை முறைக்கு வந்த விட்டது. இந்த திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் காந்தி, சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாட்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ள்ளன. நமக்காக தனது வாழ்நாளை தொலைத்த செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழனை 'தீவிரவாதி' என்று வருணித்துள்ளனர். பின்னே கண்ட கண்ட இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளை கொள்பவர்களை எல்லாம் மனிதாபிமானத்துடன் நோக்கும் இந்த குதர்க்க கும்பல் நமக்காக பாடுபட்ட நேர்மையாளர்களை, அகிம்சாவாதிகளை தீவிரவாதிகள் என்றுதான் சொல்வார்கள். இன்னும் எத்தனையோ குற்றங்கள் அவசரகதியில் அள்ளி தெளிக்கப்பட்டுவிட்டன. 

கெடப்போவதென்னவோ   நம் வீட்டு குழந்தைகள் தானே! இவர்களின் குழந்தைகள் ஆங்கில, இந்தி பள்ளியில் படித்து முன்னுக்கு வந்த விடுவார்கள். இப்போது இந்த புண்ணியவான்கள் ஒன்றுமே நடவாதது போல மொத்த தவறுக்கும் ஜெயலலிதாதான் காரணம் என்று பேசுவது, வாயில் பல்லும் இல்லை நாக்கும் இல்லை, பாம்பும் தேளும்தான் குடியிருக்கின்றன என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.  

Saturday, August 27, 2011

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கணுமாம்!

ஒரு குற்றம் நடந்து அது முறைப்படி இந்திய அரசியல் சட்ட விதிகளுக்குட்பட்டு, சிறப்பிற்குரிய இந்திய நீதி மன்றங்களினால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த தீர்ப்பினை நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றமும் உறுதி செய்துவிட்டபின்னரும், மக்களாட்சியின் அடையாளமாக குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரத்தின் படி கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நம்ம ஊரு சட்ட மாமேதைகளும், தமிழ் பற்றாளர்கள் என காட்டிக்கொள்ளும் விளம்பரப்பிரியர்களும் ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் விடுவிக்க வேண்டி போராடுகிறார்கள். மரணதண்டனையே கூடாது என்று முழங்குகிறார்கள். கொலைக்குற்றத்திற்கு எதிராக மரணதண்டனை அளிப்பது கொலைக்கு கொலை என்ற வகையாம். இவர்கள் செய்யும் காமிடிக்கு அளவில்லாமல் போய்விட்டது.

ராஜீவை கொன்றவர்கள் சிறிதும் கருணையில்லாமல்தான் அந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். தவிர இந்நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்று இந்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்டவர்கள். இதில் தமிழ் பற்று இனப்பற்று என்று உணர்ச்சி பூர்வமான விஷயங்களுக்கு இடமில்லை. ராஜீவை கொன்ற கூட்டத்தினர் அதற்கு முன்பு எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றிருக்கிறார்கள். தங்கள் தலைமைக்கு சவால் விடும் அளவிற்கு இருக்கிற தீவிர மற்றும் மிதவாத தமிழ் போராளிகளை ஈவிரக்கமின்றி கொன்றவர்கள். இவர்களுக்கு கருணை காட்ட வேண்டுமாம். இங்குள்ள சாத்தான்கள் வேதம் ஓதுகிறார்கள். இதில் என்ன பெரிய தமாசு என்றால் நம்முடைய தமிழ் வித்தவர், "சோனியா காந்தி இதில் தலையிட்டு  அந்த மூவரையும் காக்க வேண்டும்" என்கிறார். எப்படி இருக்கிறது கதை. தன் மகள் சிறையில் வாடுவதையே பொறுக்காத இந்த தமிழின துரோகத்தலைவர் கணவனை இழந்து வாடும் பெண்மணி கணவனை கொன்றவர்களுக்கு இறக்கம் காட்ட வேண்டுகிறார். இவர் மீண்டும் சிலைவைத்து சிறப்பு செய்த கண்ணகிகூட கணவனை கொன்ற மன்னனை மற்றுமல்லாமல் அவன் தலை நகரையே தீக்கிரையாக்கினாள். அவளே காட்டாத இரக்கத்தை சோனியா காட்ட வேண்டுமென்பது கேட்ககூட சகிக்கவில்லையே?


ராஜீவை இந்த கொலையாளிகள் கொன்றதை தட்டிக்கேட்காத கூட்டம், அவருடைய கொலையை புகழ்ந்த கூட்டம், கொலைக்குற்றவாளிகளை புகழ்ந்து தள்ளிய கூட்டம், தமிழின துடைப்பாளி கொலைக்காரன் ராஜபக்சேவை நேரில் சந்தித்து புகழ்ந்து, கைகுலுக்கி, பரிசுப்பொருள் பெற்று வந்து, இலங்கையில் தமிழருக்கு எந்த அநியாயமும் நடைபெறவில்லை என்று அநியாயத்துக்கு பேட்டிக்கொடுத்த கூட்டம் இன்று ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு கோருவது மனித இனத்திற்கே விரோதமான செயல் என்பது ஊரறியும். 

இவர்கள் தமாசுகளை நீங்கள் நாள்தோறும் படியுங்கள், சிந்தியுங்கள் பிறகு வாய்விட்டு சிரியுங்கள். சினிமாவில் காமெடியனுக்கு சிறப்பான பாத்திரம் அளிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லையென்றால் சினிமா சிறப்பாக இருக்காது, மக்கள் கூட்டமும் வராது. அது போன்று இன்றைய அரசியலையும் நாம் ரசிப்பதற்கு இத்தகைய கோமாளிகள் தேவை. தொடர்ந்து சிரியுங்கள்.