இன்று (29/10/2011) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது "Star News" தொலைக்கட்சியில் இடம் பெற்ற செய்தியாவது: உணவு மந்திரி திரு. கே. வி. தாமஸ், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை சந்தித்தார். அப்பொழுது விலைவாசி ஏற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சோனியா கேட்டார். விலைவாசி உயர்விற்கு பல காரணங்கள் இருப்பதாக மந்திரி சொன்னதுடன் அவற்றை பட்டியலிட்டார். சரி! விலைவாசி உயர்வை விரைவில் கட்டுக்குள் கொண்டுவாருங்கள் என்று சோனியா மந்திரியை கேட்டுக்கொண்டார் என்று முடிந்தது செய்தி. கேட்டதும் பழைய நாடக பாணி வசனங்கள் தான் மனத்திரையில் ஓடியது.
இவர்கள் நம்மை முட்டாள், மூடன், மடையன், சாம்பிராணி, ஜடம், இளிச்ச வாயன்கள் என்று முடிவு கட்டி விட்டார்கள். கோபாலா! ஏன் சார். எங்கே போரே? கடைக்குப்போறேன். என்கிற பாணியில் வசனங்களை அடுக்குகிறார்கள். விலைவாசி உயர்கிறது, அதற்கு என்ன கரணம், அதை வரம்பிற்குள் கொண்டுவர கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்கிற எந்த ஒரு தகவலும் அம்மையாருக்கு தெரியாது பாருங்கள்! மந்திரியை கேட்டுத்தான் தெரிய வேண்டும். இந்த லக்ஷணத்தில் அவர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தின் தலைவி வேறு. சமீபத்தில்தான் நிதி அமைச்சர் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைப்பதுதான் எப்படி என்பது தெரியவில்லை என்று வெளிப்படையாகவே அங்கலாய்த்தார். பிரதம மந்திரி என்கிற புண்ணியவான் பரவாயில்லை. அவர் ஏதோ பாகிஸ்தானுக்கோ, அமெரிக்காவுக்கோதான் தாம் பிரதமர் என்பது போல இந்நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்பொழுது கவலை தெரிவிப்பதோடு சரி. மற்றபடி அம்மையார் போல வசனங்களை அடுக்க மாட்டார்.
என்ன செய்வது இவர்கள் எல்லாம் நம்மை ஆள்பவர்கள். லாலு சொன்னது போல தெய்வம்தான் வண்டியை ஒட்டிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment