Monday, October 24, 2011

வடி(யா)வேலு!

தமிழர்கள் உணர்வு பூர்வமானவர்கள் (Sentimental) மற்றும் நகைச்சுவை (Jovial) மிக்கவர்கள். நான்கு பேர் ஒன்று கூடி பேச நேர்ந்தால் அரட்டை அடிப்பது இயல்பான ஒன்று. அதிலும் நகைச்சுவை எண்ணத்தை வெளிப்படுத்தாத அரட்டைகளே இருக்க முடியாது. அலுவலகங்கள், வீடுகள், தெருமுனைகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் என்று எங்கு பார்த்தாலும் கிண்டல், கேலி, என்று பேச்சில்லாத இடங்களே இருக்க முடியாது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று சகலரும் ரசிப்பது இந்த நகைச்சுவை கெலாட்டக்களைத்தான். அப்பா அம்மாவையும், அம்மா, மாமியாரையும், அத்தை, மாமன்களையும், பிள்ளைகள் ஆசிரியர்களையும் வைத்து செய்யும் கெலாட்டக்கள் சொல்லி மாளாதவை. செய்தி, திரைப்படம், பாட்டு என்று பல இருந்தாலும் நகைச்சுவை தொலைக்கட்சிக்களை பாராத இல்லங்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு தமிழர்கள் வாழ்வுடன் பின்னி பிணைந்தது. தெருக்கூத்துக்கலையானாலும் அங்கே ஒரு பபூன் இருப்பான். திரைப்படங்களில் நாகேஷ், தங்கவேலு, கருணாநிதி, பாலையா, காளை என். ரத்தினம், சந்திரபாபு, மனோரமா, முத்துலட்சுமி, சச்சு, உசிலைமணி, கவுண்டமணி, செந்தில், ஜனகாராஜ், எஸ்.வி. சேகர், லூசு மற்றும் கிரேசி மோகன்கள், கோவை சரளா, விவேக், சந்தானம், மற்றும் பெயர் மறந்துபோன சிலபேர் என்று ஒரு நீண்ட பட்டியலே தமிழர்கள் வசம் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு தொன்மையான பாரம்பரியத்தில் சமீபத்திய தமிழர்களை மிகவே ஆராதித்தவர் வடிவேலு ஆவார். இவர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். போற்றப்பட்டார். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்து என்னும் அளவிற்கு ரசிக்கப்பட்டார். 

பேச்சு பேச்சா இருக்கட்டும், வானா வலிக்குது, ஹய்யோ ஹய்யோ, வரும் வராது, மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு, என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு, வட போச்சே, சிங் இந்த ரெயின், கடுப்பேத்தறார் மை லார்ட், போன்று எத்தனையோ வார்த்தைகள் இன்று அன்றாடம் மக்கள் நடுவில் கையாளப்படுகின்றன. அந்த அளவிற்கு மக்கள் அவரை பெரிதும் விரும்பினார்கள். எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும், பல பிரபலங்கள் நகைச்சுவை படையலே இட்டிருந்தாலும், வடிவேலுவை மக்கள் உள்ளத்தில் ஏந்தியது போல வேறு எந்த கலைஞனுக்கும் இத்தகைய பதவியை தந்ததில்லை. கதாநாயக கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் பலதரப்பட்ட பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடிகர் திலகம் திகழ்ந்தார் எனில், நகைச்சுவை உலகில் அத்தகைய பாத்திரத்திற்கு ஏற்றவராக திகழும் ஒரே நகைச்சுவை கலைஞன் வடிவேலு மட்டுமே. அரசன் முதல் ஆண்டி வரை, கல்லூரி மாணவன் முதல் வெட்டியான் வரை என்று சகல வேடங்களுக்கும் பொருத்தமான ஒரே ஆள் இன்றைய உலகில் வடிவேலுதான். அவருடைய சேட்டைகள் (Body Language) மட்டுமே திரையில் தோன்றிய உடனே குபீர் சிரிப்பையும் மக்களிடத்தில் ஒரு எதிர்ப்பார்ப்பையும் தோற்றுவிப்பதாய் அமைந்து விடுகின்றன. அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பொழியும் பாணியே தனி. அதிலும் மனமொழி (உதட்டசைவின்றி பின்புலமாக ஒலிப்பது) மற்றும் முனகல் தனி ரகம். 

ஆனால் அந்தோ பரிதாபம்! சுமார் ஒரு ஆண்டு காலமாகிறது, வடிவேலுவின் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவரை கிட்டத்தட்ட ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அவர் செய்த தவறு கடந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்களை விமரிசித்து பிரச்சாரம் செய்தது மற்றும் அவரை எதிர்த்தது. இதனால் வடிவேலுவிற்கு புதிய படங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அவருடைய வருமானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதைவிட மிகப்பெரிய இழப்பு தமிழர்களுக்கும், தமிழ் கலைத்துறைக்கும்தான். அவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. அவருக்கு மாற்றாக எண்ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திணிக்கும் கலைஞர்கள் சம்பளத்தை வேண்டுமானால் கூட்டிக்கொள்ளலாம். ஏதோ எழுதியதை திரையில் வாந்தி எடுத்துவிட்டு செல்லலாம். ஆனால் அவர்கள் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை மறந்து விடக்கொடாது. தமிழக திரைத்துறையில் ஒரு ஆண்டு என்பது மிகப்பெரிய இடைவெளி. அந்த நேரத்தில் போட்டியாளர்கள் நுழைந்து காணாமல் செய்து விடுவார்கள். இருப்பினும் தமிழக ரசிகர்கள் வடிவேலுவை இன்னும் மறந்த பாடில்லை. இதற்கு இன்றைய தொலைக்காட்சிகளே சான்று. நகைச்சுவை தொலைக்காட்சிகள் மட்டும் அல்லாது பிற தொலைக்காட்சிகளும் வடிவேலுவின் நகைச்சுவை துணுக்குகளை ஒளிப்பரப்பாத நாளில்லை. அவர் எப்போதோ நடித்து வெளிவந்து, நாமும் பலதடவை பார்த்து முடித்த காட்சிகளையே அவர்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்  . அதன் பின்னர் எத்தனயோ புதிய திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. ஆயினும் அவற்றை விட வடிவேலுவை காட்டுவதிலேயே அவர்களும் பிரியப்படுகிறார்கள். ரசிகர்களும் இது ஏற்கெனவே பார்த்தாகிவிட்ட காட்சி ஆயிற்றே என்று ஒதுக்க வில்லை. அவற்றையே திரும்ப திரும்ப காண்பதில் ஆர்வம் கொள்கிறார்கள். 'சினேக் பாபு' வாகட்டும், அல்லது இன்ன பிற காட்சிகளாகட்டும் அவற்றில் ரசிகர்களுக்கு சலிப்பு இன்னமும் ஏற்படவில்லை. ஆகவே அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. 

வடிவேலுவிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும், தமிழ் கலைத்துறைக்கும் ஏற்பட்டிருக்கிற இழப்பு. இன்றைய அரசியல் மற்றும் கலைத்துறையினர் தாமாக முன்வந்து வடிவேலுவிற்கு மீண்டும் காட்சிகள் வழங்க இந்த நகைச்சுவை உணர்வு மேம்படவும், மேலோங்கி தழைக்கவும் வகை செய்ய வேண்டும்.           

No comments:

Post a Comment