
உள்ளாட்சி தேர்தல்(17 & 19 அக்டோபர் 2011) பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மூலாமூலைக்கு சென்று வேட்பாளர்கள் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி சார்பு வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் தலைவர்களும் உலா வருகிறார்கள். இந்த பிரச்சாரத்தில் அந்தந்த பகுதியின் தேவைகளை கருத்தில் கொண்டு அந்த பகுதி பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதுதான் வாடிக்கை. ஆனால் திரு. வைகோவும் திரு. ஸ்டாலினும் ஏதோ தமிழக சட்ட மன்ற தேர்தல் நடப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று மக்களை கேட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை பேசினால் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி பேசுவார்கள்? இத்தனை நாட்கள் உள்ளாட்சி முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டில்தானே இருந்தது. இவர்களின் கட்சியினர் கொள்ளையடித்து உள்ளாட்சியை போண்டியாக்கி வைத்து விட்டார்களே! அதை சொல்லியா பிரச்சாரம் செய்ய முடியும்? கால்நடையாகவோ, சைக்கிளிலோ சென்றவநேல்லாம் கவுன்சிலராகி இன்று சுமோ, போலேரோ போன்ற வாகனங்களில் உலா வருவது வாக்களிக்கும் மக்களின் கண்களை உறுத்தாமல் இல்லை. இவர்கள் பிரச்சாரத்தை நம்பி மோசம் போகக்கூடிய நிலையில் மக்கள் இல்லை.

இதில் மேலும் ஒரு வேடிக்கை, திரு.வைகோ கூறியதுதான். "ஜெயலலிதா ஆட்சியில் ஒரு மாதம் பள்ளிக்கூடமே திறக்கவில்லை. இரண்டு மாதங்கள் புத்தகங்கள் வழங்கவில்லை. இவர்களுக்கு பாடம் புகட்ட உள்ளாட்சி தேர்தலில் எதிர்த்து வாக்களியுங்கள்" என்று முழங்கியிருக்கிறார் இந்த சிங்கத்தமிழன். சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா இவர்களுக்கு கூட்டணியில் பங்கு கொடுக்காத கோபம் இன்னும் இருக்கிறது போலும். இல்லையென்றால் இந்நேரம் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளியிருப்பரே! கர்ஜனைக்குரல் யாழ்பாணம் வரையிலும் எதிரொலித்திருக்குமே! சமச்சீர் கல்வியில் பள்ளித்திறப்பு, புத்தகம் வழங்களில் காலதாமதத்திற்கு ஜெயலலிதா மட்டும் காரணமா? இவர்களின் பங்கு ஒன்றுமில்லையா? அப்படி என்ன தவறை ஜெயலலிதா செய்துவிட்டார்?
அரசு பதவி ஏற்றவுடன் சமச்சீர் கல்வியை இந்தாண்டு நிறுத்தி அமைச்சரவை முடிவு செய்தது. கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவித்தது. ஜெயலலிதாவை எதிர்ப்பதையே கொள்கையாக கொண்ட இவர்களுக்கு ஒரு வருடம் கூட பொறுக்க முடியவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றார்கள். நம் நாட்டில் நீதிமன்றத்திற்கு சென்றால் உடனடியாகவா முடிவு கிடைக்கும்? நீதிமன்றத்தில் முடிவு வந்தபின் மேல்முறையீட்டில் உயர்நீதி மன்றம் சென்றது அரசு. அதையும் குறை கூறினார்கள். மேல்முறையீட்டு உரிமை இருக்கும் பொழுது அதை பயன்படுத்துவது எப்படி தவறாகும். உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியை அமல் படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. அதை உடனடியாக நடைமுறை படுத்திவிட்டது அரசு. இதில் அரசின் காலதாமதம் எதுவும் இல்லை. காலதாமதத்திற்கு காரணம் எதிர் கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றதுதான். செல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு காலதாமதமில்லாமல் வகுப்புகள் நடந்திருக்கும். குறைகளை களைந்து அடுத்த ஆண்டு சிறந்த கல்வி திட்டம் அமல் படுத்தப்பட்டிருக்கும். இதில் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்பட்டிருக்காது.

தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்றும், தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றும், தங்கள் விருப்பமே உடனடியாக நிறைவேறவேண்டும் என்று எதிர் கட்சிகள் வானத்திற்கும் மண்ணுக்கும் குதித்த குதிப்பில் பல குறைபாடுகளுடன் சமசீர்கல்வி என்ற பெயரில் தமிழக குழந்தைகளின் படிப்பு வீணாகும் திட்டம் நடை முறைக்கு வந்த விட்டது. இந்த திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் காந்தி, சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாட்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ள்ளன. நமக்காக தனது வாழ்நாளை தொலைத்த செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழனை 'தீவிரவாதி' என்று வருணித்துள்ளனர். பின்னே கண்ட கண்ட இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளை கொள்பவர்களை எல்லாம் மனிதாபிமானத்துடன் நோக்கும் இந்த குதர்க்க கும்பல் நமக்காக பாடுபட்ட நேர்மையாளர்களை, அகிம்சாவாதிகளை தீவிரவாதிகள் என்றுதான் சொல்வார்கள். இன்னும் எத்தனையோ குற்றங்கள் அவசரகதியில் அள்ளி தெளிக்கப்பட்டுவிட்டன.

கெடப்போவதென்னவோ நம் வீட்டு குழந்தைகள் தானே! இவர்களின் குழந்தைகள் ஆங்கில, இந்தி பள்ளியில் படித்து முன்னுக்கு வந்த விடுவார்கள். இப்போது இந்த புண்ணியவான்கள் ஒன்றுமே நடவாதது போல மொத்த தவறுக்கும் ஜெயலலிதாதான் காரணம் என்று பேசுவது, வாயில் பல்லும் இல்லை நாக்கும் இல்லை, பாம்பும் தேளும்தான் குடியிருக்கின்றன என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment