Thursday, August 4, 2011

சுயமரியாதையுள்ள ஆடு மாடுகள்

எதிர்க்காலத்தை பற்றி சிந்திப்பவன்தான் தலைவனாகிறான். மற்றைய எல்லாரும் வெறும் வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றும் நய வஞ்சகர்களாகிறார்கள். அவர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்திலும் அக்கறை கொள்வதில்லை. தங்கள் இனத்தின் மீதும் அக்கறை கொள்வதில்லை. அப்படித்தான் இருக்கிறது ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு. 

ஜெயலலிதா மக்களை ஆடு மாடு மேய்க்க சொல்கிறார். படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார், என்று சகட்டு மேனிக்கு புழுதி வாரி இறைத்திருக்கிறார். மக்களுக்கு படிப்பு மிகவும் அவசியம். ஆனால் அந்த கல்வி அவர்களின் அறியாமையை போக்கி சொந்த காலில் தன்மானத்துடன் நிற்க செய்ய வேண்டும். இன்றைய கல்வி அவ்வாறு செய்கிறதா என்று நாம் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். வெறும் ஏட்டுக்கல்வி, அதுவும் அடுத்தவனிடம் கைகட்டி சேவகம் செய்ய ஒரு படிக்கல்லாக மட்டுமே தோற்றமளிக்கிறது. மற்றபடி மக்கள் அறியாமை கடலில் மூழ்கி சுயநல தலைவர்களுக்கு கூஜா தூக்கியபடிதான் இருக்கிறார்கள். கல்வியின் பணி இக்காலத்தில் இதோடு முடிகிறது. நம் படிப்பிற்கும் நம் வேலை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் நம் தரித்திரம் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பொருளாதார அளவு கொலையும் ஒன்றாகவே ஆக்கிவிட்டிருக்கிறோம். 

நம்முடைய பொருளாதாரத்தை கல்வி உயர்த்துவதை காட்டிலும் கல்வி சம்பந்தமில்லாத துறைகள்தான் சிறப்பாக உயர்த்த முடியும். ஆடு மாடு பராமரிப்பு, விவசாயம், பட்டு வளர்ப்பு, தேயிலை, காபி தோட்டங்கள், பீடி சுற்றுதல், நெசவு என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. இவற்றில் கல்வியின் தேவை மிக மிக சொற்பமே. கல்வி சம்பந்தமே இல்லாத இந்த துறையில் முன்னேறிய பலர்தான் இன்று நாட்டில் எண்ணற்ற படித்த மக்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்தான் ஜெயலலிதா மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் ஆடு மாடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறார். இதில் குறை கூற ஒன்றுமில்லை. வெறுமெனே புறம்போக்கு மேட்டு நிலங்களில் மேய்த்து விட்டு வந்தாலே சுமார் மூன்று அல்லது ஐந்து லிட்டர் பால் கறக்கும் கறவை மாடு சமூகத்தில் அடித்தட்டில் உள்ள எண்ணற்ற பயனாளிகளுக்கு ஒரு வரபிரசாதம் ஆகும். மாடு வளர்ப்பதால் நாட்டில் வெண்மை புரட்சி மேலும் விரிவு படும். இதில் மக்களின் படிப்பிற்கு எந்த இடையூருமில்லை. சொல்லப்போனால் குஜராத் மாநிலத்தை விட பால் உற்பத்தியில் தமிழகம் முன்னேற ஒரு வழி செய்யப்பட்டிருக்கிறது. 

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏதோ வெறும் வாயை மென்றிருக்கிறார் மு.க.ஸ். இவர்கள் காலத்தில் மக்களின் பொருளாதாரத்தில் சிறிதும் பங்கு பெறாத, இவர்கள் வீட்டு பொருளாதாரம் மட்டுமே மேம்படும் வண்ணம் வண்ணத்தொலைக்காட்சி கொடுத்தார்களே அதை விட இது பல்லாயிரம் மடங்கு மேம்பட்ட சிறந்த திட்டம். ஆடு மாடு மேய்ப்பது ஒரு சிறந்த தொழில். பலருக்கு ஜீவாதார தொழில். புனித தொழில். இதை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. படித்து விட்டு, பட்டங்கள் பெற்று மேல் பதவிகளுக்கு சென்று கையூட்டு பெற்று வாழும் வாழ்வை விட இவ்வாறு படிக்காமல் இருந்தும் ஒரு புனித தொழில், களங்கமற்ற தொழில் அடுத்தவருக்கு உதவும் தொழில் செய்வது உன்னதமானது. அதைத்தான் செயல் படுத்தி மக்களிடையே தன்மானத்தை, சுயமரியாதையை நிலை நாட்ட முயன்றிருக்கிறார் ஜெயலலிதா. அவர் உண்மையில் ஒரு தலைவர்தான்.

சுயமரியாதையற்ற ஒரு கூட்டம் இங்கே அரசியல் செய்து பிழைக்கிறது. அவ்வாறில்லாமல் சுயமரியாதையுடன் ஒரு ஆடு மாட்டு கூட்டத்தை வைத்து பிழையுங்கள் என்று தான் மக்களுக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு எமது நன்றி.   

  

No comments:

Post a Comment