
இன்றைய தேதியில மிக சிறப்பான வியாபாரம்னா அது கல்விதான். பத்துக்கு பத்து ரூம் கிடைச்சாகூட போதும் அங்கே ஒரு கான்வென்ட், பள்ளிக்கூடம்னு தொடங்கிட வேண்டியதுதான். பொது சேவைங்கற பேர்ல ஒரு பெரிய கொள்ளை வியாபாரத்தை தொடங்கிடலாம். அப்படி நடக்கிற காலத்துல போய் கல்வி கட்டணம் அதிகம், அதை தடுக்கணும்னு அப்பாவிங்க காட்டுக்கூச்சல் போட்டா யாரு கேட்கபோரா. இதுக்கு விசாரிக்க ஒரு நீதிபதி தலைமையில குழு அது இதுன்னு போட்டு புரட்சி பண்ணிக்கிட்டிருக்காங்க நம்ம தமிழனுங்க. இந்த அவலத்தைபோய் எங்க சொல்லுறது. தோண்டியும் போத்தலு, தாம்பும் அறுதலுன்ற மாதிரி நம்ம ஊரு விவகாரம் நடந்துகிட்டிருக்குது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், அரசாங்கம் மற்றும் போதுமக்கள்னு இதுல யாருமே யோக்யமா நடந்துக்கல்ல!
முதல்ல அரசாங்கத்தை பார்ப்போம். இன்றைய அரசு பள்ளிக்கூடங்கள் பல இடிந்து, சிதிலமாகி, பன்றிகள், ஆடுமாடுகள், ரவுடிகள், பொறுக்கிகளின் கூடாரமாக கிடக்கின்றன. இதை கவனிக்க அரசுக்கு நேரமில்லை. சாராய வியாபாரம் செய்யும் அரசு பள்ளிக்கூடங்களை பராமரிக்க நேரமில்லாமல் தவிக்கிறது. ஒரே ஒரு ஆசிரியரைக்கொண்டு என்னேற்றல் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்தப்படுகின்றன என்றால் அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்று பாருங்கள். கட்டிடம், கழிப்பிடம், குடிநீர், பெஞ்சுகள், கரும்பலகைகள் என்று எண்ணற்ற குறை பாடுகள் இன்றைய பள்ளிகளில் கிடக்கின்றன. அதுவும் போக அங்குள்ள குழந்தைகளை கொண்டு ஆசிரியர்கள் கூட்டுவது, தண்ணீர் கொண்டுவருவது, கரும்பலகைகளுக்கு கரிபூசுவது என்று பல வேலைகளை செய்விக்கிறார்கள். இந்த லட்சணத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் மாத சம்பளம் சுமார் இருபத்தைந்தாயிரத்தை தொடுகிறது. அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீர். மருந்துக்கு குறைச்சலில்லை பிள்ளைதான் பிழைத்தபாடில்லை.

அடுத்து பெற்றோர்கள். இவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தின் மீது அக்கறை இருப்பதால் தான் மேற்கூறிய அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்காமல், நல்ல தரமான தனியார் பள்ளிகளை தேடி செல்கிறார்கள். தரம் என்றாலே அங்கு விலை கூடத்தான் இருக்கும் என்பது இவர்கள் அறியாததல்ல. கட்டிட பீசு, டியுஷன் பீசு, அந்த பீசு இந்த பீசு என்று பீசு பீசாகி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். தரமும் வேண்டும் ஆனால் காசும் செலவாக கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் இவர்கள் இப்போது தனியார் பள்ளிக்கட்டணத்தை குறைக்க கூப்பாடு போடுகிறார்கள். தங்கள் ஊரில் தங்கள் வீட்டிற்கருகில் உள்ள அரசு பள்ளிகளை உதாசீனப்படுத்தியதன் விளைவை இவர்கள் இப்போது சந்திக்க வேண்டியிருக்கிறது. தங்கள் ஊர் பள்ளிக்கூடம் சிதிலமடைந்து இருக்கிறது என்பது இவர்களில் எத்தனைப்பேருக்கு தெரியும். ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இவர்கள் அங்குள்ள பள்ளியை சீரமைக்க வேண்டி கேட்டதுண்டா? அங்கு தளவாட சாமான்களை வாங்கித்தரும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததுண்டா? சம்பளம் மட்டுமே வாங்கிக்கொண்டு தங்கள் பிள்ளைகளிடம் வேலை வாங்கிக்கொண்டு, பாடம் சரிவர நடத்தாமல், பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை பற்றி அரசுக்கு புகார் கொடுத்ததுண்டா? அவ்வப்பொழுது அங்கு நடத்தப்படும் பாடங்களின் தரங்கள் பற்றி கல்வி அதிகாரியுடனோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடனோ இவர்கள் ஆலோசனை நடத்தியதுண்டா? இப்படி பலவகைகளில் தங்களுக்கு சொந்தமான, உரிமையுள்ள பள்ளியின் மீது அக்கறை செலுத்தாத இவர்கள் தனியார் பள்ளிகளை விரும்பித்தானே நாடி சென்றார்கள். இப்போது அங்கே கட்டணம் அதிகம் அது இது என்று கொடி பிடித்தல் எப்படி நியாயம் ஆகும்? அரசை கேட்டுக்கொண்டா இவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தார்கள். கட்டணத்தை மட்டும் குறைக்க அரசிடம் ஏன் நாட வேண்டும்? கட்டணம் அதிகம் என்றால் பேசாமல் அரசு பள்ளிக்கு மாற்றலாகி வரவேண்டியதுதானே? இன்றைய பெற்றோர் பலர் சுயநலவாதிகளாகிவிட்டார்கள். ஊர் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை தான் அவதிபடகூடாது. தனக்கு ஒரு கஷ்டம் என்றால் அரசு கைகொடுக்க வேண்டும். இது என்ன நீதி?

கடைசியாக தனியார் பள்ளி உரிமையாளர்களைப்பற்றியது. இவர்கள் ஏதோ கல்வி சேவை செய்து நம் தேசத்தையும், குழந்தைகளையும் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை. அதை ஒரு வியாபாரமாக அதுவும் கொள்ளைக்கூடாரமாக நடத்தவே பிறந்தவர்கள்தான் இந்த கூட்டத்தினர். அந்த காலத்தில் அண்ணாமலை செட்டியார், அழகப்பா செட்டியார், பச்சையப்பா முதலியார் என்று எண்ணற்ற பெரியோர்கள் கல்வியை சேவையாக கொண்டு தங்கள் சொத்து சுகங்கள் என்று அனைத்தையும் எழுதி வைத்துவிட்டு போனார்கள். அவர்கள் நடத்தியது சேவை. அவர்களோடு இந்தக்காலத்து கல்வி முதலாளிகளை சேர்க்கக்கூடாது. இவர்கள் கொள்ளையடிக்கவே பிறந்தவர்கள். கல்வி சேவை என்பது ஒரு முகமூடி அவ்வளவுதான். கல்வி அனைவருக்கும் அளிக்கும் விதத்தில் அரசு செயல்பட வேண்டும் என்றாலும், தானாக முன்வந்து சேவை மனப்பான்மையுடன் கல்விச்சாலைகளை நடத்தும் தனியாரையும் அரசு உற்சாக படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தருகிறது. ஆனால் அந்த காலத்து கல்வி வள்ளல்களைப்போல் அல்லாமல் இப்போது கல்விச்சாலைகளை நடத்துவோரிடம் சிறிதும் நேர்மையும் நற்பண்புகளும் இல்லை. கொள்ளை அடிப்பவன், கொலை செய்தவன், சாராயம் காயச்சுபவன், விபச்சாரம் நடத்தியவன், வரி ஏய்ப்பவன், அத்தகைய குற்றங்களுக்காக சிறை சென்றவன் என்ற ஒரு நீண்ட பட்டியலுக்கு சொந்தக்காரர்கள்தான் இன்று கல்விச்சாலைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் சேவையை எதிர்பார்ப்பது நம்முடைய மடமையைதான் காட்டுகிறது. இவர்கள் நேர்மையாக நடந்தால்தான் அதிசயம். கல்வி வியாபாரம்தான் இவர்களின் இலக்கு. இதில் போய் கட்டணம் அதிகம் அது இது என்று முரண்டு பிடித்தால் அது சரியாகுமா?

இதற்கு சரியான தீர்வு படித்த வேலையில்லா இளைஞர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்துவதுதான். தங்கள் ஊர் அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் இவர்களை நியமித்து குழந்தைகளுக்கு பாடம் நடத்த அரசு ஊக்கப்படுத்தவேண்டும். பள்ளிகளின் நிலைமையை சீர் செய்து மேம்படுத்த வேண்டும். ஊர் பெரியவர்களைக்கொண்ட ஒரு குழு அமைத்து பள்ளிகளை அவ்வப்பொழுது ஆய்வு செய்விக்க வேண்டும். அதே சமயம் தனியார் பள்ளிகளின் மீதுக் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். காற்றோட்டமான அறைகள், விளையாட்டு மைதானங்கள், உபகரணங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டும். இதில் எந்த ஒரு சலுகைகளும் இருக்க கூடாது. தாங்கள் தப்பித்துக்கொள்ள 'மைனாரிட்டி' என்ற அந்தஸ்தை பயன்படுத்துவதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும். அத்தகைய கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் பள்ளிகளை மூடிவிட வேண்டும். எதிர்கால தமிழகம் மிகவும் சிறப்பாகவும், வருங்கால சந்ததிகள் பொதுநல நோக்கோடு செயல்படவும் வேண்டுமானால் அரசு கல்வியின் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment