Saturday, August 13, 2011

ஜனநாயகத்தின் (உளுத்துப்போன) நான்காவது தூண்

சன் டி.வி. யில் வாரநாட்களில் காலை எட்டு மணிக்கு "வாங்க பேசலாம்" என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பட்டிமன்ற புகழ் ராஜாவும், பாரதி பாஸ்கரும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாட்களில் நன்றாக இருக்கும். சில நாட்களில் மிகவும் போரடிக்கும். ஆனால் மொத்தத்தில் தகவல்கள் தரும்படி இருக்கும். இப்படித்தான் 08/07/2011 அன்று இப்போதெல்லாம் யாரும் பத்திரிக்கைகளை அவ்வளவாக விரும்பி படிப்பதில்லை என்றும், குழந்தைகளிடம் இந்த பழக்கத்தை நாம் வளர்க்க வேண்டும் என்றும் இதனால் விழிப்புணர்வு வளர்ந்து ஜனநாயகம் காக்கப்படும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இதை கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. இவர்கள் இந்தியாவில் இல்லாமல் வேற்றுலகில் எங்காவது வாழ்கிறார்களா என்கிற சந்தேகம் வந்தது. ஏனென்றால் இன்றைய பத்திரிக்கைகள் நடந்துகொள்ளும் போக்கை பார்த்தால் இன்னும் எப்படி ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது என்கிற வியப்புத்தான் மேலிடுகிறது. 

பத்திரிகை உலகத்தைத்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லுவார்கள். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை கவனமாக பார்த்து மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதோடு ஜனநாயக விளக்கு அணைந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் மிகப்பெரிய பணி பத்திரிக்கைக்கு உண்டு என்பதால்தான் அவ்வாறு கூறுகிறார்கள். அப்படியொன்றும் நம்ம ஊரு பத்திரிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் அதை கொள்ள நினைக்கும் பாதகர்களுக்கு துணைபோகவே செய்கின்றன.

விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் என்றொரு திரைப்படம். அதில் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பத்திரிகை உரிமையாளர். அரசியல்வாதிகள் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார். என்னுடைய பத்திரிக்கையை படித்துத்தான் மக்கள் நிலவரத்தை தெரிந்து கொள்ளவேண்டும். அத்தகைய நிலவரத்தைத்தான் நான் உருவாக்க வேண்டும் என்று கொக்கரிப்பார். மாற்று பத்திரிக்கைகளின் குரல்வளையை தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நெரிப்பார். இன்று இந்தியாவில் ஏறத்தாழ பத்திரிக்கைகள் இப்படித்தான் செயல் படுகின்றன.

பரபரப்புக்கு எதையாவது எழுதி தள்ளுவது. அதில் உண்மை இருக்கிறதா என்று உணர்வதில்லை. படிக்கும் தலைமுறை எக்கேடுகேட்டாவது போகட்டும் என்று ஆபாசம், வன்முறை, சினிமா கிசு கிசு அநாகரீக அரசியல் செய்திகள் என்று சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். பத்திரிகை தர்மம் என்று எதுவும் கிடையாது. ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டு அவர்கள் சொல்லுவதை எழுதுவது. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காதது, அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களின் வருமானத்திற்காகவும், அண்டி பிழைத்து காரியம் செய்து கொள்வதற்காகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதுகின்றன இன்றைய பத்திரிக்கை உலகம். கருணாநிதி ஆட்சியில் இருந்த பொது இவர்கள் என்றாவது உண்மையை எழுதியிருக்கிறார்கள? வடநாட்டு மீடியாக்கள் செயல்பட்ட அளவிற்கு கூட இவர்கள் 2G விவகாரத்தை பிரசுரிக்கவில்லை. கருணாநிதி ஆட்சிக்கு திரும்ப வரமாட்டார் என்று அவரே நினைத்திருந்த நேரத்தில் கூட இவர்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் என்று போலியான கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சுமார் 2400 க்கும் மேற்பட்ட நிலா அபகரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் சில போலியாக இருக்கலாம், சில வஞ்சம் தீர்க்க பதிவானவையாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை வழக்குகள் உண்மையாக இருக்கலாம். இத்தகைய உண்மையை அன்றைய ஆட்சியின்போது பத்திரிகை உலகம் கண்டும் காணாமல் இருந்தது. 

இன்று நாட்டை பல பிரச்சனைகள் வாட்டி வதைக்கின்றன. விவசாய நிலபரப்பு குறைதல், விவசாயத்துக்கு தேவைப்படும் நீர், உரம், விதை பற்றாக்குறை, மின் உற்பத்தி பாதிப்பு, பலவித நோய்கள் தொற்றுதல், மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை கேன்சர் போல பரவிக்கிடக்கும் ஊழல் என்று எதையாவது இவர்கள் எழுதுகிறார்களா என்றால் இல்லை. மாறாக நடிகர் நடிகையர், அரசியல்வாதிகளின் பேட்டியை கட்டம் கட்டி பிரசுரித்து இளம் தலைமுறையை கேடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஒரு எழுச்சி எமர்ஜென்சிக்கு எதிராக எழுந்த போது தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. அப்படிப்பட்ட பணிகளை இன்று எந்த பத்திரிக்கைகள் செய்கின்றன. இன்றைய பத்திரிக்கைகள் காங்கிரஸ், பி.ஜே.பி. கம்யுனிஸ்ட் என்று பிளவு பட்டு நிற்கின்றன. ஆனால் நாட்டின் நன்மைக்காக யாரும் அதன் பக்கம் யாரும் நிற்பதாக தெரியவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, திரு.ராஜாவும் திருமதி.பாரதியும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முழங்கிக்கொண்டிருந்தது கேட்க பரிதாபமாக இருந்தது.

No comments:

Post a Comment