Sunday, April 3, 2011

மெனெக்கெட்டு என்ன கிரிக்கெட்டு?

இப்பெல்லாம் கிரிக்கெட்டு பார்க்கணும், பேசணும், படிக்கணும். இல்லைன்னா உங்களை வேற்று கிரக மனிதர்களாவே பார்ப்பார்கள். காரணம், நாம் சொந்தமாக சிந்திப்பதில்லை. அடுத்தவர்களை காப்பி அடித்தே பழகி விட்டோம். போதா குறைக்கு காலம் காலமா அடிமையாவே இருந்துட்டோமில்லையா? அதனாலதான் சுதந்திரம் வந்தும் அந்நிய மோகமும் அடிமைத்தளையும் போகவேமாட்டேங்கிறது. 

கிரிக்கெட்டு சும்மா விளையாட்டா மட்டுமிருந்தா நாம ரசிக்கலாம். அனால் இதை வைத்து இங்கே ஒரு கொள்ளை வியாபாரமில்ல நடக்குது. ஆட்டக்காரன் உடம்பெல்லாம் விளம்பரம். அங்கே விற்பனை ஆகாதா பொருள் என்று இருந்தால் அது வேடிக்கை பார்க்க வரும் நம்மைப்போன்ற அப்புராணிங்க மட்டும்தான். பேட்டிங், பிக்சிங், ஏலம் அப்படி இப்படின்னு அரசியல்வாதிகள், கார்பரேட் பெருச்சாளிகளின் ஆடுகலாமா அந்த விளையாட்டு ஆனபின்பு நமக்கென்ன அங்கே வேலை. நாம அங்கே இருக்கிறவறையிலும்தான் இவங்களுக்கு மரியாதை. அவங்க வியாபாரத்தோட முதலீடே நாம்தான். 

இந்தியா உலக கோப்பையை வென்றுவிட்டதாம். ஒரு பெரிய காக்காய் வலிப்பை உண்டாக்கிவிட்டு, கோடிக்கணக்கான ரசிகர்களை மாங்காய் மடையர்களாக்கிவிட்டார்கள். முதலில் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். கோப்பையை வென்றது இந்திய அணியே அல்ல. அது பி.சி. சி. ஐ. அணியாகும். அது ஒரு சங்கம். அந்த சங்கத்திற்கும் இந்திய அணி என்ற முத்திரைக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இல்லை. "நாங்கள் தனி சங்கம். எங்களுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. எங்களை அரசினால் கட்டுபடுத்த இயலாது" என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வாக்குமூலம் தந்தவர்கள் இந்த பி சி சி ஐ காரர்கள். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டிக்காக அணியை அனுப்ப மறுத்தவர்கள். இதனால் இந்தியாவிற்கு கிடைத்திருக்கக்கூடிய மேலும் ஒரு தங்கபதக்கம் ஸ்ரீலங்காவிற்கு கிடைத்தது. இப்படி தேசபற்று துளியுமில்லாமல் செயல் படும் ஒரு கொள்ளைக்கூட்டத்தின் அணியை நாம் தவறாக தலையில் வைத்து கொண்டாடுகிறோம். அந்த அணிக்கு எதிரான கருத்தை தெரிவித்தால் அது தேச விரோதம் என்ற அளவிற்கு மயங்கி கிடக்கின்றோம். 

இப்படி நாம் கிடக்கிறோம். அனால் நம்மை ஆள்வோர் என்ன செய்கிறார்கள். நாடு மக்கள் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல் அந்த கிரிக்கெட்டை காண முன்னணியில் அமர்ந்துக்கிடக்கிறார்கள். பிரதமர், குடியரசு தலைவர், எதிர்கட்சி தலைவர் என்ற வித்தியாசமில்லாமல் அங்கே வெட்கமில்லாமல் அமர்ந்து கிடக்கிறார்கள். நாம் எவ்வளவோ கேட்டும் இந்திய சார்பாக அணியை அனுப்ப மறுத்த ஒரு சங்கம், தங்களுக்கும் அங்கீகர இந்திய அணிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வெளிப்படையாகவே கூறும் ஒரு சங்கம், அவர்கள் நடத்தும் போட்டிக்கு செல்ல இந்த தலைவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ. இதில் யாருக்கும் வெட்கமில்லை. உண்மையில் இந்தியாவின் பேரையும், கொடி போன்ற சின்னங்களையும் அவதூறாக பயன்படுத்தியதற்காக அந்த சங்கத்திற்கு நோட்டீசு அனுப்பியிருக்க வேண்டும். இந்திய மண்ணிலும் அந்நிய மண்ணிலும் அவ்வாறு நடக்க தடை விதித்திருக்க வேண்டும். இவர்கள்தான் வெட்கம் கேட்டவர்கலாயிற்றே. நாளையே அல் கொய்தா நடத்தும் போட்டியிலும் பங்கேற்பார்கள் யார் கண்டது.  

No comments:

Post a Comment