Friday, August 5, 2011

வசதியான வார்த்தைகள் (Sub-judice)

 இந்த அரசியல் கட்சி தலைவர்கள் பொதுவாக பயன் படுத்தும் வார்த்தை 'வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது. அது பற்றி கருத்தை தெரிவிக்க இயலாது' என்பதாகும். அனால் இவர்களுக்கு வேண்டும்பொழுது என்னெவெல்லாமோ கருத்து தெரிவிப்பார்கள். உதாரணத்துக்கு சிலவற்றை பாருங்கள். இதில் யாருக்கும் வெட்கமில்லை. 

1. ஜெயலலிதா, சமீபத்தில் புதுதில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி குறித்து பெட்டி அளித்திருந்தார். அதற்கு கருத்து தெரிவித்த சிதம்பரம், விஷயம் நீதி மன்றத்திலிருப்பதாக கூறி நழுவிக்கொண்டுவிட்டார். 

2. தானைத்தலைவரும் அவர்கள் கூட்டமும் அவ்வப்பொழுது பொன்மொழிகளை உதிர்ப்பார்கள். 2G வழக்கு சம்பந்தமாக யாராவது ஏதாவது கேட்டால் வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது என்று கூறி தப்பித்துக்கொள்ளும் இவர்கள், ஜெயலலிதா மீதான பெங்களூரு நீதி மன்ற வழக்கை பற்றி மட்டும் ஏகத்தும் பெட்டி தருவார்கள். வழக்கு சம்பந்தப்பட்டவர் வாய்தா வாங்குவது என்பது நம் நாட்டில் ஆண்டாண்டு காலம் நடந்து வரும் சடங்கு. வாய்தா கேட்பது கட்சிக்காரர்களின் உரிமை அதை வழங்குவதும் மறுப்பதும் நீதி மன்றத்தின் உரிமை. இதை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அப்போது மட்டும் இவர்கள் வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது என்று கூறுவதில்லை. 

3. சமச்சீர் கல்வி என்று அரைகுறை திட்டத்தை அறிமுக படுத்தி தமிழக மாணவர்களின் எதிர் காலத்தை சூறையாடிய இவர்கள் நேற்று (04/08/2011) நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டிருக்கிறார்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கும்போது நாடாளு மன்றத்தில் எழுப்புவது தவறு என்று இவர்களுக்கு தெரியாதா. அப்போது வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது என்று விட்டு செல்ல வேண்டியதுதானே?

Thursday, August 4, 2011

சுயமரியாதையுள்ள ஆடு மாடுகள்

எதிர்க்காலத்தை பற்றி சிந்திப்பவன்தான் தலைவனாகிறான். மற்றைய எல்லாரும் வெறும் வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றும் நய வஞ்சகர்களாகிறார்கள். அவர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்திலும் அக்கறை கொள்வதில்லை. தங்கள் இனத்தின் மீதும் அக்கறை கொள்வதில்லை. அப்படித்தான் இருக்கிறது ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு. 

ஜெயலலிதா மக்களை ஆடு மாடு மேய்க்க சொல்கிறார். படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார், என்று சகட்டு மேனிக்கு புழுதி வாரி இறைத்திருக்கிறார். மக்களுக்கு படிப்பு மிகவும் அவசியம். ஆனால் அந்த கல்வி அவர்களின் அறியாமையை போக்கி சொந்த காலில் தன்மானத்துடன் நிற்க செய்ய வேண்டும். இன்றைய கல்வி அவ்வாறு செய்கிறதா என்று நாம் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். வெறும் ஏட்டுக்கல்வி, அதுவும் அடுத்தவனிடம் கைகட்டி சேவகம் செய்ய ஒரு படிக்கல்லாக மட்டுமே தோற்றமளிக்கிறது. மற்றபடி மக்கள் அறியாமை கடலில் மூழ்கி சுயநல தலைவர்களுக்கு கூஜா தூக்கியபடிதான் இருக்கிறார்கள். கல்வியின் பணி இக்காலத்தில் இதோடு முடிகிறது. நம் படிப்பிற்கும் நம் வேலை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் நம் தரித்திரம் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பொருளாதார அளவு கொலையும் ஒன்றாகவே ஆக்கிவிட்டிருக்கிறோம். 

நம்முடைய பொருளாதாரத்தை கல்வி உயர்த்துவதை காட்டிலும் கல்வி சம்பந்தமில்லாத துறைகள்தான் சிறப்பாக உயர்த்த முடியும். ஆடு மாடு பராமரிப்பு, விவசாயம், பட்டு வளர்ப்பு, தேயிலை, காபி தோட்டங்கள், பீடி சுற்றுதல், நெசவு என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. இவற்றில் கல்வியின் தேவை மிக மிக சொற்பமே. கல்வி சம்பந்தமே இல்லாத இந்த துறையில் முன்னேறிய பலர்தான் இன்று நாட்டில் எண்ணற்ற படித்த மக்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்தான் ஜெயலலிதா மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் ஆடு மாடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறார். இதில் குறை கூற ஒன்றுமில்லை. வெறுமெனே புறம்போக்கு மேட்டு நிலங்களில் மேய்த்து விட்டு வந்தாலே சுமார் மூன்று அல்லது ஐந்து லிட்டர் பால் கறக்கும் கறவை மாடு சமூகத்தில் அடித்தட்டில் உள்ள எண்ணற்ற பயனாளிகளுக்கு ஒரு வரபிரசாதம் ஆகும். மாடு வளர்ப்பதால் நாட்டில் வெண்மை புரட்சி மேலும் விரிவு படும். இதில் மக்களின் படிப்பிற்கு எந்த இடையூருமில்லை. சொல்லப்போனால் குஜராத் மாநிலத்தை விட பால் உற்பத்தியில் தமிழகம் முன்னேற ஒரு வழி செய்யப்பட்டிருக்கிறது. 

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏதோ வெறும் வாயை மென்றிருக்கிறார் மு.க.ஸ். இவர்கள் காலத்தில் மக்களின் பொருளாதாரத்தில் சிறிதும் பங்கு பெறாத, இவர்கள் வீட்டு பொருளாதாரம் மட்டுமே மேம்படும் வண்ணம் வண்ணத்தொலைக்காட்சி கொடுத்தார்களே அதை விட இது பல்லாயிரம் மடங்கு மேம்பட்ட சிறந்த திட்டம். ஆடு மாடு மேய்ப்பது ஒரு சிறந்த தொழில். பலருக்கு ஜீவாதார தொழில். புனித தொழில். இதை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. படித்து விட்டு, பட்டங்கள் பெற்று மேல் பதவிகளுக்கு சென்று கையூட்டு பெற்று வாழும் வாழ்வை விட இவ்வாறு படிக்காமல் இருந்தும் ஒரு புனித தொழில், களங்கமற்ற தொழில் அடுத்தவருக்கு உதவும் தொழில் செய்வது உன்னதமானது. அதைத்தான் செயல் படுத்தி மக்களிடையே தன்மானத்தை, சுயமரியாதையை நிலை நாட்ட முயன்றிருக்கிறார் ஜெயலலிதா. அவர் உண்மையில் ஒரு தலைவர்தான்.

சுயமரியாதையற்ற ஒரு கூட்டம் இங்கே அரசியல் செய்து பிழைக்கிறது. அவ்வாறில்லாமல் சுயமரியாதையுடன் ஒரு ஆடு மாட்டு கூட்டத்தை வைத்து பிழையுங்கள் என்று தான் மக்களுக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு எமது நன்றி.   

  

Sunday, July 3, 2011

"கல்வி (கல்லா) கட்டணம்"

இன்றைய தேதியில மிக சிறப்பான வியாபாரம்னா அது கல்விதான். பத்துக்கு பத்து ரூம் கிடைச்சாகூட போதும் அங்கே ஒரு கான்வென்ட், பள்ளிக்கூடம்னு தொடங்கிட வேண்டியதுதான். பொது சேவைங்கற பேர்ல ஒரு பெரிய கொள்ளை வியாபாரத்தை தொடங்கிடலாம். அப்படி நடக்கிற காலத்துல போய் கல்வி கட்டணம் அதிகம், அதை தடுக்கணும்னு அப்பாவிங்க காட்டுக்கூச்சல் போட்டா யாரு கேட்கபோரா. இதுக்கு விசாரிக்க ஒரு நீதிபதி தலைமையில குழு அது இதுன்னு போட்டு புரட்சி பண்ணிக்கிட்டிருக்காங்க நம்ம தமிழனுங்க. இந்த அவலத்தைபோய் எங்க சொல்லுறது. தோண்டியும் போத்தலு, தாம்பும் அறுதலுன்ற மாதிரி நம்ம ஊரு விவகாரம் நடந்துகிட்டிருக்குது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், அரசாங்கம் மற்றும் போதுமக்கள்னு இதுல யாருமே யோக்யமா நடந்துக்கல்ல!

முதல்ல அரசாங்கத்தை பார்ப்போம். இன்றைய அரசு பள்ளிக்கூடங்கள் பல இடிந்து, சிதிலமாகி, பன்றிகள், ஆடுமாடுகள், ரவுடிகள், பொறுக்கிகளின் கூடாரமாக கிடக்கின்றன. இதை கவனிக்க அரசுக்கு நேரமில்லை. சாராய வியாபாரம் செய்யும் அரசு பள்ளிக்கூடங்களை பராமரிக்க நேரமில்லாமல் தவிக்கிறது. ஒரே ஒரு ஆசிரியரைக்கொண்டு என்னேற்றல் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்தப்படுகின்றன என்றால் அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்று பாருங்கள். கட்டிடம், கழிப்பிடம், குடிநீர், பெஞ்சுகள், கரும்பலகைகள் என்று எண்ணற்ற குறை பாடுகள் இன்றைய பள்ளிகளில் கிடக்கின்றன. அதுவும் போக அங்குள்ள குழந்தைகளை கொண்டு ஆசிரியர்கள் கூட்டுவது, தண்ணீர் கொண்டுவருவது, கரும்பலகைகளுக்கு கரிபூசுவது என்று பல வேலைகளை செய்விக்கிறார்கள். இந்த லட்சணத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் மாத சம்பளம் சுமார் இருபத்தைந்தாயிரத்தை தொடுகிறது. அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீர். மருந்துக்கு குறைச்சலில்லை பிள்ளைதான்  பிழைத்தபாடில்லை.  

அடுத்து பெற்றோர்கள். இவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தின் மீது அக்கறை இருப்பதால் தான் மேற்கூறிய அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்காமல், நல்ல தரமான தனியார் பள்ளிகளை தேடி செல்கிறார்கள். தரம் என்றாலே அங்கு விலை கூடத்தான் இருக்கும் என்பது இவர்கள் அறியாததல்ல. கட்டிட பீசு, டியுஷன் பீசு, அந்த பீசு இந்த பீசு என்று பீசு பீசாகி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். தரமும் வேண்டும் ஆனால் காசும் செலவாக கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் இவர்கள் இப்போது தனியார் பள்ளிக்கட்டணத்தை குறைக்க கூப்பாடு போடுகிறார்கள். தங்கள் ஊரில் தங்கள் வீட்டிற்கருகில் உள்ள அரசு பள்ளிகளை உதாசீனப்படுத்தியதன் விளைவை இவர்கள் இப்போது சந்திக்க வேண்டியிருக்கிறது. தங்கள் ஊர் பள்ளிக்கூடம் சிதிலமடைந்து இருக்கிறது என்பது இவர்களில் எத்தனைப்பேருக்கு தெரியும். ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இவர்கள் அங்குள்ள பள்ளியை சீரமைக்க வேண்டி கேட்டதுண்டா? அங்கு தளவாட சாமான்களை வாங்கித்தரும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததுண்டா? சம்பளம் மட்டுமே வாங்கிக்கொண்டு தங்கள் பிள்ளைகளிடம் வேலை வாங்கிக்கொண்டு, பாடம் சரிவர நடத்தாமல், பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை பற்றி அரசுக்கு புகார் கொடுத்ததுண்டா? அவ்வப்பொழுது அங்கு நடத்தப்படும் பாடங்களின் தரங்கள் பற்றி கல்வி அதிகாரியுடனோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடனோ இவர்கள் ஆலோசனை நடத்தியதுண்டா? இப்படி பலவகைகளில் தங்களுக்கு சொந்தமான, உரிமையுள்ள பள்ளியின் மீது அக்கறை செலுத்தாத இவர்கள் தனியார் பள்ளிகளை விரும்பித்தானே நாடி சென்றார்கள். இப்போது அங்கே கட்டணம் அதிகம் அது இது என்று கொடி பிடித்தல் எப்படி நியாயம் ஆகும்? அரசை கேட்டுக்கொண்டா இவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தார்கள். கட்டணத்தை மட்டும் குறைக்க அரசிடம் ஏன் நாட வேண்டும்? கட்டணம் அதிகம் என்றால் பேசாமல் அரசு பள்ளிக்கு மாற்றலாகி வரவேண்டியதுதானே? இன்றைய பெற்றோர் பலர் சுயநலவாதிகளாகிவிட்டார்கள். ஊர் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை தான் அவதிபடகூடாது. தனக்கு ஒரு கஷ்டம் என்றால் அரசு கைகொடுக்க வேண்டும். இது என்ன நீதி?

கடைசியாக தனியார் பள்ளி உரிமையாளர்களைப்பற்றியது. இவர்கள் ஏதோ கல்வி சேவை செய்து நம் தேசத்தையும், குழந்தைகளையும் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை. அதை ஒரு வியாபாரமாக அதுவும் கொள்ளைக்கூடாரமாக நடத்தவே பிறந்தவர்கள்தான் இந்த கூட்டத்தினர். அந்த காலத்தில் அண்ணாமலை செட்டியார், அழகப்பா செட்டியார், பச்சையப்பா முதலியார் என்று எண்ணற்ற பெரியோர்கள் கல்வியை சேவையாக கொண்டு தங்கள் சொத்து சுகங்கள் என்று அனைத்தையும் எழுதி வைத்துவிட்டு போனார்கள். அவர்கள் நடத்தியது சேவை. அவர்களோடு இந்தக்காலத்து கல்வி முதலாளிகளை சேர்க்கக்கூடாது. இவர்கள் கொள்ளையடிக்கவே பிறந்தவர்கள். கல்வி சேவை என்பது ஒரு முகமூடி அவ்வளவுதான். கல்வி அனைவருக்கும் அளிக்கும் விதத்தில் அரசு செயல்பட வேண்டும் என்றாலும், தானாக முன்வந்து சேவை மனப்பான்மையுடன் கல்விச்சாலைகளை நடத்தும் தனியாரையும் அரசு உற்சாக படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தருகிறது. ஆனால் அந்த காலத்து கல்வி வள்ளல்களைப்போல் அல்லாமல் இப்போது கல்விச்சாலைகளை நடத்துவோரிடம் சிறிதும் நேர்மையும் நற்பண்புகளும் இல்லை. கொள்ளை அடிப்பவன், கொலை செய்தவன், சாராயம் காயச்சுபவன், விபச்சாரம் நடத்தியவன், வரி ஏய்ப்பவன், அத்தகைய குற்றங்களுக்காக சிறை சென்றவன் என்ற ஒரு நீண்ட பட்டியலுக்கு சொந்தக்காரர்கள்தான் இன்று கல்விச்சாலைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் சேவையை எதிர்பார்ப்பது நம்முடைய மடமையைதான் காட்டுகிறது. இவர்கள் நேர்மையாக நடந்தால்தான் அதிசயம். கல்வி வியாபாரம்தான் இவர்களின் இலக்கு. இதில் போய் கட்டணம் அதிகம் அது இது என்று முரண்டு பிடித்தால் அது சரியாகுமா? 

இதற்கு சரியான தீர்வு படித்த வேலையில்லா இளைஞர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்துவதுதான். தங்கள் ஊர் அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் இவர்களை நியமித்து குழந்தைகளுக்கு பாடம் நடத்த அரசு ஊக்கப்படுத்தவேண்டும். பள்ளிகளின் நிலைமையை சீர் செய்து மேம்படுத்த வேண்டும். ஊர் பெரியவர்களைக்கொண்ட ஒரு குழு அமைத்து பள்ளிகளை அவ்வப்பொழுது ஆய்வு செய்விக்க வேண்டும். அதே சமயம் தனியார் பள்ளிகளின் மீதுக் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். காற்றோட்டமான அறைகள், விளையாட்டு மைதானங்கள், உபகரணங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டும். இதில் எந்த ஒரு சலுகைகளும் இருக்க கூடாது. தாங்கள் தப்பித்துக்கொள்ள 'மைனாரிட்டி' என்ற அந்தஸ்தை பயன்படுத்துவதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும். அத்தகைய கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் பள்ளிகளை மூடிவிட வேண்டும். எதிர்கால தமிழகம் மிகவும் சிறப்பாகவும், வருங்கால சந்ததிகள் பொதுநல நோக்கோடு செயல்படவும் வேண்டுமானால் அரசு கல்வியின் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.   

Wednesday, June 22, 2011

இராமனுக்கு தலைக்குனிவு

முத்தமிழ் வித்தவர், தமிழின துடைப்பாளி சமீபத்தில் முத்தொன்றை உதித்திருக்கிறார். இராமன் ஆட்சியை இழந்த பின்புதான் தாடகையை வாதம் செய்தான் என்று அருளியிருக்கிறார். இதன் மூலம் இவர் தம் இயக்கத்தின் கொள்கையை நாடு ரோட்டில் தோலுரித்து காட்டியதுமில்லாமல் தமக்கு இராமாயணமும் தெரியாது என்பதை பறை சாற்றியிருக்கிறார். 

இராமாயணத்தில், விசுவாமித்திர மகாமுனிவர் இராமனையும் இலக்குவனையும் தமது வேள்வியை காக்க வேண்டி மாமன்னர் தயரதனிடமிருந்து கேட்டு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் தாடகை என்ற அரக்கர் இனத்து பெண்மணி விசுவாமித்திரரின் வேள்வியை சிதைக்கும் எண்ணத்தோடு வருகிறாள். அவளை குருவின் அணையை ஏற்று வாதம் செய்கிறார் சக்கரவர்த்தி திருமகனார். இது இராமன் இளவரசனாக இருந்த பொழுது நடந்தது. இராமனுக்கு திருமணம் நடைபெறும் முன்பு, தயரதன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்ய இருந்த பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. இங்கே இராமன் முடியிழந்தான் என்ற பேச்சே எழவில்லை.  

அடுத்து தமிழை பிழைப்பாக கொண்டிருப்பவரின் கொள்கை இராமன் ஆரியன் என்பது. இராவணனும் அவனது சுற்றத்தினரும் திராவிடர்கள் என்பது. இதை விளக்கவே இராவண லீலாவை நடத்திய கூட்டத்தினர்தான் இவர்கள். இப்படியிருக்க இவர் தன்னை இராமனாக உருவகம் செய்து கொண்டிருப்பது பெரிய விந்தைதான். அதுவும் எதிரில் இருக்கும் பார்ப்பன பெண்மணியை தாடகையாக உவமை கூறியிருப்பது, தம் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தை மறைக்க கூறியிருக்கும் நயவஞ்சக சொற்கள்தான். தனக்கென்றால் இராமாயணத்தையும் அதுவும் அரைகுறையாக புரிந்துகொண்டு விளக்கம் கூறுவார். பிறருக்கேன்றால் அவர்களை கேலி கிண்டல் செய்து இரண்டு பக்க கட்டுரை வரைவார். 

பாவம் அவர் என்ன செய்வார். "மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்" என்று புரட்சி தலைவர் ஒரு திரைப்படத்தில் பாடியதற்கேற்பதானே வாழ்ந்து வருகிறார். அப்படித்தான் புலம்புவார். வரும் காலங்களில் அவர் இன்னும் என்னென்ன சந்திக்க வேண்டி இருக்கின்றதோ. அந்திம கால திருதராட்டிரன் போன்ற நிலைதான் அவருக்கு. கொள்ளை அடித்து சொத்து சேர்த்த காலங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட கொடுமையான இகழ்ச்சியையும் துயரத்தையும் சந்திக்க நேர்ந்து விட்டது. 

Saturday, May 7, 2011

பசுமைத் தமாசு

 04/05/2011 அன்று ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் ஆட சென்னை வந்திருந்த தோனி ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த ஓட்டல் எதிரில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு கண்டன போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காரணம் என்ன? தோனி இந்தியாவுக்காக சிறப்பாக ஆடவில்லையா? மேட்ச் பிக்சிங் ஏதாவது செய்து நாட்டுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தினார? இல்லை வேறு ஏதாவது சட்ட விரோத தேச விரோத செயல்களில் ஈடுபட்டார? எதுவுமே இல்லை? பின் எதற்காக இந்த போராட்டம்? பசுமைத்தயகத்தினர் சொன்ன காரணத்தை கேட்டால் சிரிப்புத்தான் வரும். "தோனி மது பான விளம்பரத்தில் நடித்தார். அதைக்கண்டித்துத்தான் இந்த போராட்டம்" என்றார்கள் கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ இல்லாமல். 

சரி. யார் இந்த பசுமைத்தாயகத்தினர். சமூக நீதிப்போராளி, மரம்வெட்டியார் கட்சியை சார்ந்த அமைப்புத்தான் இது. இதன் தலைவியாக மரம்வேட்டியாரின் மருமகள்தான் திகழ்கிறார். இது போன்ற போராட்டங்களை நடத்தி அவ்வப்போது தாங்களும் பொது சேவை செய்வதாக அறிவித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான். தமிழகத்தில் பசுமை சுருங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை பார்த்தாலே புரியும் இவர்களின் செயல் பாடு எந்த நிலையில் உள்ளது என்று. 

அவர்கள் மது பானத்திற்கெதிராகத்தானே போராடுகிறார்கள் அதை ஏன் குறை கூற வேண்டும். அதை நாம் குறை கூறவில்லை. இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்றுதான் கேட்கிறோம். தோனி மது பான விளம்பரத்தில் நடித்தது ஒன்றும் பெரிய குற்றமல்லவே. இந்திய நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டுத்தானே அவர் நடிக்கிறார். அனால் இந்த இயக்கத்தின் தலைவியின் மாமனார் கட்சி என்ன செய்கிறது. தமிழகத்தில் மது பானத்தை பேரல் பேரலாக வியாபாரம் செய்யும் கட்சியுடன் தானே கூட்டு வைத்துக்கொண்டிருக்கிறார். அத்தகைய ஆட்சியை புகழோ புகழ் என்று புகழ்ந்து தேர்தலில் ஓட்டு கேட்டாரே! அவரை கண்டித்து ஆரபாட்டம் நடத்த வேண்டியதுதானே? செய்திருந்தால் தெரிந்திருக்கும் இவர்களுடைய கதி. பாவம் தோனி என்னவென்றே புரியாமல் சேப்பாக்கத்தில் விளையாடிவிட்டு சென்றார். 

இப்படி இவர்கள் செய்வதும் இவர்களுக்கும் புரியாது, அடுத்தவனுக்கும் விளங்காது. போராட வேண்டிய இடத்திலும் போராட மாட்டார்கள். கூடாத இடத்தில் பயங்கரமாக குரல் கொடுப்பார்கள். இவர்கள் எல்லாம்தான் தமிழின போராளிகள். சமுதாய சிங்கங்கள். தமிழனை கேவலப்படுத்த இவர்களுக்கு இணை இவர்கள்தான்.  

Saturday, April 9, 2011

"காமிடி பண்றாங்கோ"

இந்த தமிழ்நாடு எலக்சன் நமக்கு ரொம்ப புதுசா இருக்கு. போஸ்டர் இல்ல, மைக் போட்டு காத்து கூச்சல் போடல்ல, தோரணம் கட்டி தெருவை நாரடிக்கல்ல, நம்ம வீட்டு செவுத்துல அவங்க அப்பன் வீடு மாதிரி எழுதல, இப்படி பல புதுசு. தலைவருங்க பேச்சுக் கூட புதுசா தான் இருக்கு. சாம்பிளுக்கு சிலது.

கருணாநிதி: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் உற்பத்தி பெருக்குவோம். தடையில்லா மின்சாரம் வழங்குவோம்" 
(இந்த ஐந்து வருடமும் உங்க ஆட்சி இல்லைன்னு நினைச்சிக்கிட்டிருந்தீங்களா? இல்ல இதுவரைக்கும் கொள்ளை மட்டும் அடிச்சீங்களா?)

ஸ்டாலின்: "தலைவர் கலைஞரின் திட்டங்கள் மக்களை சென்று அடைந்திருக்கின்றன" (ஆமா. நீங்கதான் வீரப்ப சொல்றீங்க. தேர்தல் ஆணையம் எங்கே அடைய விடுது? அதான் பாதி வழியிலியே பிடிச்சிடுராங்களாமே?)

அழகிரி: " தேர்தலுக்கு பிறகு அ. தி. மு. க. இருக்காது" (தேர்தல் வரையாவது நீங்க இருப்பீங்களா? அந்த கலெக்டர் என்ன இந்த பாடு படுத்துறாரே?) 

மன்மோகன் சிங்: "ஊழலை ஒழித்தே தீருவது என்று இந்த அரசு செயல்படுகிறது"  (ஐயோ பாவம். ராசா ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன் வெலத்து ஊழல், குட்ரோச்சி தப்பிச்ச ஊழல், குதிரை வியாபாரி வெளிநாட்டில் பணம் பதுக்கியது, இதெல்லாம் சரி கட்டியாச்சா? இவ்வளவு வீறாப்ப சவுண்டு விடுறாரு. இல்ல மக்கள் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறாரா? நாற்பது திருடங்களுக்கு தலைவரா இருந்துக்கிட்டு பேச்ச பாரு பேச்ச)

ஜெயலலிதா: "அரசு ஊழியர்களின் குறைகளை களைவோம். அவர்கள் நலன் பாதுகாக்கப்படும்" (ஏம்மா! ராவோட ராவா அவங்களை கைது பண்ணி புழல் சிறையில வெச்சி வாராவாரம் பிரியாணி போடபோறீங்களா?)

சோனியா காந்தி: "தமிழக அரசின் செயல் பாடுகள் சரியாக உள்ளன. அவை மக்களை சென்று அடைந்திருக்கின்றன" (உங்க வீட்டு வாசல்ல கருணாநிதி ஆறு மணிநேரம் வெயிட் பண்ணது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சின்றது உங்களுக்கும் தெரிஞ்சிபோச்சா?)

சுஷ்மா சுவராஜ்: "தமிழக மீனவர்களுக்கு பி.ஜே.பி. கேடயமாக இருக்கும்" (அவங்க மீன் பிடிக்க போறதுக்கு முன்னாடி நீங்க போவீங்களா?

ராகுல் காந்தி: "இந்த அரசின் செயல் பாடுகளை பார்த்து ஓட்டு போடுங்கள்" (நேரடியா கருணாநிதிக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லிட்டு போங்களேன். அவரு மேல அப்படி என்ன கோவம்?)

வைகோ: "தேர்தலை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க போகிறோம்" (ஏன் சார்! நீங்க ஜெயாவோட மீட்டிங் வருவதே வேடிக்கை பார்க்கிறா மாதிரி தான் இருக்கும். இது என்ன புதுசா)

சு. சுவாமி: "எங்களுக்கு ஐந்து எம்.எல். ஏ. கிடைத்தால் போதும். யாரையும் ஊழல் செய்ய விடமாட்டோம்" (நீங்களே ஊழல் செய்துக்குவீங்களா?)

ராமதாஸ்: "வன்னியர்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் கலைஞர்தான்" (அதனால்தான் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க கலைஞர் மருத்துட்டரோ?)

திருமாவளவன்: "தமிழினம் தலை நிமிர கலைஞரை ஆதரிப்பீர்"  (ராஜபக்சேவை சந்தித்து கை குலுக்கி ஆதரிச்ச மாதிரியா?)

இவ்வளவு நேரம் உங்களை சிரிக்க வெச்சதுக்கு எனக்கு நன்றியாவது சொல்லுங்களேன். தமிழன் நன்றி கேட்டவன்ற பேரு வேணாம். 

Sunday, April 3, 2011

மகாபலி மன்னன் என்ன பாவம் செய்தானோ?

வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் தன்னை மகாபலி மன்னனோடு ஒப்பிட்டுக்கொண்டு, தாம்  அவரைப்போல் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அதை பொறுக்காத கும்பல் பூணூல் உருவிக்கொண்டு அவர் ஆட்சியை கலைக்க வருவதாகவும் பொருமியுள்ளார். அவர் தேர்தல் (௦02/04/2011)பொதுக்கூட்டத்தில் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அது அவர் உரிமை. கேட்கவந்த மக்கள் தலையெழுத்து. இடையில் நாம் யார்? ஆனால் அதற்காக நம் புராணத்தை தவறாக திரித்து கூறும்போது அதை கண்டித்து ஒரு விளக்கம் கூட தெரிவிக்கா விட்டால் நாம் இருந்து என்ன பயன்?

முதலில் ஒரு விளக்கம். பகவான் குள்ள உருவம் கொண்டு வாமனாக வந்து மகாபலி மன்னனிடத்தில் மூன்றடி மண் கேட்டான்? அவனுடைய குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் தர வேண்டாம் என்று தடுக்கிறார். மகாபலி மன்னன் சிறிதும் கேளாமல், தன் கையாலேயே நீரை விட்டு தானமாக தருகிறான். நீர் கிண்டியிலிருந்து நீர் விழாமலிருக்க வண்டு உருவம் கொண்டு சுக்கிரர் அடிக்கிறார். இதை அறிந்த பெருமான் சிறு தருப்பை புள் கொண்டு அந்த கிண்டியின் ஓட்டையை குத்தும் பொழுது சுக்கிரரின் பார்வை பரி போகிறது. பிறகு திரிவிக்ரமனாக உரு கொண்டு பூமியையும் ஆகாயத்தையும் ஈரடியில் அளந்து, மூன்றாவது அடி எங்கே என்று கேட்க மகாபலியும் தனது தலையை காட்ட அவனை பாதாள உலகத்திற்கு அனுப்பிவைத்தான். இது பதினெட்டு புராணங்களில் வாமன மற்றும் பாகவத புராணங்களில் வருகின்றது. 

மகாபலி மன்னன், பரம பக்தனான பிரஹலாதனின் பேரன். மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். அவன் நல்லாட்சியே நடத்தி வந்தானாயினும், அவனை சார்ந்தோர் தேவர்களுக்கு மிகவும் இன்னலை தந்தார்கள். வேதமுறைப்படி நடைபெற வேண்டிய நேம நிஷ்டைகள் அங்கே தடை பட்டன. இந்த காலகட்டத்தில் தான் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு அதிதி என்ற தாயின் வயிற்றில் வாமனனாக பிறக்கின்றார். அதிதியின் மகன் என்பதால் அவர் ஆதித்யன் என்றும், இந்திரனுக்கிளையவன் என்கிறபடியால் உபேந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். பகவான் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பி அங்கே அவனுக்கு மிகச்சிறந்த அரச உரிமையை அளித்தார். மாறாக அவனை கொல்லவில்லை. உன்னுடைய வம்சாவழியினருக்கு என்னால் எந்த ஒரு தீங்கும் நேராது என்று பிரகலாதனுக்கு அளித்த வரத்தின் படியே அவனுக்கு அருள் பாலித்தார். இதுதான் புராணம் தரும் செய்தி.

இப்போது நம்ம கதைக்கு வருவோம். மேற்கூறிய புராண கதைக்கும் கருணாநிதிக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? வட தென் துருவங்களுக்கிடையேயான வித்தியாசம்தான் இருக்கிறது. 

1. கருணாநிதியோ நாத்திகன். புராணங்களை ஏற்காதவர். பழிப்பவர். கிண்டல் செய்பவர். அவை கற்பனை என்று முழங்குபவர். அந்த வரிசையில் மகாபலியும் இவர் கணக்கில் கற்பனைதான். இல்லாத விஷயம்தான். அதனோடு தன்னை ஒப்புமை படுத்துகிறார் என்றால் அவரின் அறிவை பற்றி என்னெவென்று புகழ்வது. 

மகாபலியோ ஆத்திகன். பிரகலாதனின் பேரன். பகவான் விஷ்ணுவின் பரமபக்தன்.       

2. கருணாநிதி செய்வது ஆட்சி என்ற பெயரில் நடக்கும் அலங்கோலம். தமிழர்களை தன்மானம் இழக்க செய்து பிச்சைக்கார கும்பலாக அண்டை அயலாரிடம் வேடிக்கை பொருளாக்கிவிட்ட அதிசயம். அனால் மகாபலி செய்தது மிகச்சிறந்த ஆட்சி. அவன் பாதாள லோகம் சென்றும் மக்கள் அவனை காண அவள் கொள்ளும் அளவுக்கு மிகச்சிறந்த ஆட்சி. 

3. கருணாநிதி தன் குடும்பத்திற்காக உழைப்பவர். மகாபலி பிறருக்காக உழைப்பவர். 

4. தன்னை ஒழிக்க பூணூலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் வருவதாக கற்பனையாக ஒரு புரளியை கிளப்பிவிட்டவர் கருணாநிதி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். இவர் எதிர்ப்பதாக கூறும் ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ, கம்யூனிஸ்டுகளோ, முஸ்லிம் அமைப்புகளோ, புதிய தமிழகமோ, சரத் குமார் போன்றோரோ பூணூல் அணிந்திருக்கவில்லை. இவரின் தேர்தல் தில்லுமுல்லுக்கு துணை போகாத, கிடுக்கிப்பிடி போட்டிருக்கும் தலைமை தேர்தல் அதிகாறு திரு. குரைஷியோ, மாநில அதிகாரி திரு. பிரவீன் குமாரோ கூட பூணூல் போட்டிருக்கவில்லை. பிறகு இவர் யாரைத்தான் கூறுகிறார். அவருக்கே வெளிச்சம். 

அனால் மகாபலியை அகற்ற பூணூல் உருவிக்கொண்டு யாரும் வரவில்லை. வாமனனும் யாசகம் பெற வந்தானேயன்றி படை எடுத்து வரவில்லை. சொல்லப்போனால் சுக்கிராசார்யார் என்ற பூணூல் காரரின் பேச்சை கேட்காததின் விளைவைத்தான் மகாபலி அனுபவித்தான். இங்கே அந்த பூணூல் தான் காக்க முன்வந்தது.  

இந்த விஷயத்தில் ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்ளது. மகாபலி கேரளாவை ஆண்டதாக அம்மாநில மக்கள் நம்புகிறார்கள். அது அவனுடைய சொத்து என்பது அவர்களின் நம்பிக்கை. இத்தகைய ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்கும் வந்து தொலைக்கவேண்டும். தமிழகம் முழுமையும் கருணாநிதியின் குடும்ப சொத்தாக வேண்டும் என்று இவர் கனவு காண்கிறார் போலிருக்கிறது. 

இப்படி சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களை, தமக்கும் எல்லாம் தெரிந்த மாதிரி கற்பனை செய்து கூறுவது ஒரும் அதிசயமில்லை. வயசாகிவிட்டால் உளறத்தானே செய்வார்கள்.